

சோலார் பேனல் முறைகேடு வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மின்சாரத் துறை அமைச்சர் ஆர்யாடன் முகம்மது ஆகியோர் மீதான, ஊழல் ஒழிப்பு நீதிமன்ற விசாரணைக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பான சாண்டி, முகம்மது ஆகியோரின் மனுவை ஏற்று, “புகாரில் எதுவும் முழுமையாக தெரிவிக்கப்பட்டிராத நிலையில் துரித சரிபார்ப்பின் அடிப்படையில், ஊழல் ஒழிப்பு நீதிமன்றம் வழக்கை அவசர கதியில் நடத்துகிறது” எனக் கூறி நீதிபதி பி.கேமல் பாஷா விசாரணைக்கு தடை விதித்துள்ளார்.
சோலார் முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர், இவ்வழக்கில் உம்மன் சாண்டிக்கு தொடர்பு உள்ளது என்றும், சாண்டிக்கு ரூ.1.90 கோடி மற்றும் முகமதுவுக்கு ரூ. 40 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கில் சரிதா நாயருக்கு விசாரணை ஆணையம் ஏற்கெனவே கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, விசாரணை ஆணையரும் சிறப்பு நீதிபதியுமான எஸ்எஸ் வாசன், சாண்டி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதனிடையே, ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.