

ஜே.என்.யூ. மாணவர்கள் பல்கலை. வளாகத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டனர், துர்க்கையம்மனுக்கு பதிலாக மகிஷாசுரனை வழிபட்டனர் எனவே அவர்கள் தேச விரோதிகள் என்று டெல்லி போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜே.என்.யூ.வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பு கடந்த 2 ஆண்டுகளாக எந்த அளவுக்கு இருந்தது என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அப்சல் குரு தூக்கு தண்டனைக்கு துக்கம் அனுசரித்த அன்றைய தின சம்பவங்கள் குறித்த போலீஸ் அறிக்கையில், “டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு எப்போதுமே மாணவர்கள் மீது ஒரு கண் வைத்து வந்துள்ளது. இது குறித்து நாங்கள் ஏற்கெனவே சில அறிக்கைகளை அனுப்பியுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “அக்டோபர் 16, 2015-ல் டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு ஜே.என்.யூ. துணைவேந்தர் எஸ்.கே.சோப்ராயை சந்தித்துள்ளது. இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பல்கலை. வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவது பிரதானமாக விவாதிக்கபப்ட்டது. மேலும், வளாகத்தினுள் மாணவர்கள் அடிக்கடி ஆர்பாட்டத்திலும் கோஷங்களிலும் ஈடுபடுவதும் விவாதிக்கப்பட்டது.
ஜனநாயக மாணவர் சங்கம், ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு என்ற இரண்டு அமைப்புகள் தேச விரோத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
சில சமயங்களில் இந்த அமைப்பினர் இந்துக் கடவுளர்களின் நிர்வாண படத்தை சுவர்களில் ஒட்டி உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளனர். அப்சல் குருவுக்கு துக்கம் அனுசரித்த அதே வேளையில், தாண்டேவாடாவில் துணை ராணுவப்படையினர் பலியானதை கொண்டாடியுள்ளனர்.
துர்க்கைக்கு பதிலாக மகிஷாசுரனை கும்பிட்டுள்ளனர். மாட்டுக்கறி எடுத்துக் கொண்டனர். எஸ்.ஏ.ஆர்.கிலானியை சொற்பொழிவாற்ற அழைத்துள்ளனர்” என்று டெல்லி போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.