

திட்டக்குழுவுக்கு மாற்றாக புதிய அமைப்பை ஏற்படுத்துவது தொடர் பாக அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் 7-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
கடந்த சுதந்திர தினத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், “1950-களில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வந்த நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள திட்டக் குழுவை ஏற்படுத்தியது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் உள்நாட்டு பொருளாதார சூழ்நிலையும், சர்வதேச சூழலும் மாறியுள்ளன. எனவே, திட்டக்குழுவைவிட பொருத்தமான அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. விரைவில் புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவோம்” என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, புதிய அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களின் கருத்துகளை அறிய ஆலோசனை கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்துள்ளார். இக்கூட்டம் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது.
நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, பொருளா தாரத்தை மேம்படுத்துவதற்காக திட்டக்குழுவை அமைத்தார். பிரதமரைத் தலைவராகக் கொண்ட இக்குழு, அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடுகளை செய்து வந்தது. இக்குழுவின் துணைத் தலைவராக அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இருந்தனர்.
முதல்வர்களுடன் முதல் கூட்டம்
பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்பு, மாநில முதல்வர்களுடன் நடத்தப்படும் முதல் கூட்டம் இதுவாகும். மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகளை செலவிடுவதில், மத்திய மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. 2014 2015 நிதியாண்டில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திட்டக்குழுவுக்கு மாற்றாக கொண்டு வரப்படும் புதிய அமைப் பான கொள்கை ஆணையத்துடன் ஆதார் திட்ட ஆணையத்தையும், நேரடி மானிய உதவி அளிக்கும் திட்டத்தையும் இணைப்பது குறித்தும் ஆலோசனை செய்யப் படும்.
முந்தைய திட்டக்குழுவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அந்த அதிகாரம் மத்திய நிதி அமைச்சகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திட்டக்குழுவுக்கு மாற்றாக வரும் புதிய அமைப்பில் 4 செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். கொள்கைகளை வகுத்தல் மற்றும் திட்ட அமலாக்கத்தை மதிப்பிடுதல், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலை நிர்வகித்தல், ஆதார் அட்டை, நேரடி மானிய உதவித் திட்டம் ஆகிய பிரிவுகளுக்கு இச்செயலாளர்கள் தனித்தனியே பொறுப்பேற்பார்கள்.