Last Updated : 13 Jan, 2017 06:42 PM

 

Published : 13 Jan 2017 06:42 PM
Last Updated : 13 Jan 2017 06:42 PM

மான் வேட்டையாடிய வழக்கு: சல்மான், சயீப், சோனாலி, நீலம், தபு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

மான் வேட்டையாடி வழக்கில், வாக்குமூலம் பதிவு செய்வதற்கு ஆஜராகும்படி நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலி கான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, நீலம், தபு ஆகியோருக்கு ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில், ‘ஹம் சாத் சாத் ஹெயின்’ இந்திப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலி கான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, நீலம், தபு உட்பட பலர் பங்கேற்றனர். அக்டோபர் 1-ம் தேதி அங்குள்ள கன்கனி என்ற கிராமப் பகுதியில் படப்பிடிப்பின் போது, அரிய வகை கறுப்பு இன மான் வேட்டையில் சல்மான் கான் ஈடுபட்டதாகவும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கில் மற்ற 4 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை ஜோத்பூர் மாவட்ட தலைமை ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் தல்பாத் சிங் நேற்று விசாரித்தார். பின்னர் வழக்கில் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு நீதிமன்றத்தில் ஜனவரி 25-ம் தேதி ஆஜராகும்படி சல்மான் கான் உட்பட 5 பேருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக சல்மான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ஜனவரி 18-ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x