

தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு மற்றும் இது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் மே-9-ம் தேதி தீர்ப்பு ஆகியவற்றை எதிர்த்து வழக்காட விரும்புவதாக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
சி.எஸ்.கர்ணனுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில் ‘எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை’ என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து வழக்காட விரும்புவதாக வழக்கறிஞர் மூலம் கர்ணன் மனு தாக்கல் செய்துள்ளார்.
கர்ணனின் வழக்கறிஞர் இதனை முத்தலாக் மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இடையில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹரிடம் தெரிவித்தார்.
இந்த மனுவை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி கேஹர் உறுதியளித்துள்ளார்.
கர்ணன் எங்கு இருக்கிறார் என்று அவரது வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே.நெடும்பராவிடம் கேட்ட தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிக்காக இவர் வாதாடுவதற்கான அதிகாரபூர்வ ஆவண ஆதாரங்களைக் காட்டும்படி கோரினார்.
மே 10-ம் தேதி கர்ணன் சென்னையில் இருந்ததாகக் கூறினார் வழக்கறிஞர் மேத்யூஸ். மேலும் இதுவரை நீதிபதி கர்ணன் சார்பாக வாதாட 12 வழக்கறிஞர்கள் மறுத்து விட்ட விவரத்தையும் தலைமை நீதிபதியிடம் தெரிவித்தார்.