

பசு, காளை, எருமை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கவும் வாங்கவும் மத்திய அரசு கடந்த மே 23-ம் தேதி தடை விதித்தது. இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் நேற்று கூறியதாவது:
மாட்டிறைச்சி தடை என்பது மத்திய அரசின் கவுரவ பிரச்சினை இல்லை. எந்தவொரு சமுதாயத்தையோ, உணவு பழக்க வழக்கத்தையோ, இறைச்சி தொழிலையோ குறிவைத்து அரசாணை வெளியிடப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகள், பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கலாம். அவற்றை பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.