

சத்தீஸ்கரில் வறுமையும், நிர்வாக சீர்கேடு அதிகரித்திருப்பதாகக் குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக அரசின் நிர்வாகம் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
மேலும், மாவோயிஸ்ட் பிரச்சினை எதிர்கொள்வதில் ராமன் சிங்கின் அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும், சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளதாகவும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
சத்தீஸ்கரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11-ல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட சோனியா காந்தி, ஆளும் பாஜக அரசின் மீது சரமாரித் தாக்குதலைத் தொடுத்தார்.
காங்கிரஸ் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசும்போது, "இந்த மாநிலத்தின் பாதுகப்பு நிலை குறித்து உங்கள் அனைவருக்குமே தெரியும். இது எந்த மாதிரியான அரசு என்று உங்கள் அனைவரிடமும் கேட்க விரும்புகிறேன். மாவோயிஸ்டுகளின் வன்முறையால் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர்.
இந்த ஆண்டு கூட, நக்சல் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களது இழப்பால் இன்று நாம் வருந்துகிறோம். இந்த மாநிலத்தின் முதல்வர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஆனால், அவர் முதலைக் கண்ணீர் வடிப்பதால் என்ன பலன்?
உயிர்த் தியாகம், வளர்ச்சி மற்றும் ஏழைகளின் வாழ்க்கையில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் முதலான வரலாற்றைக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். போலியான வாக்குறுதிகள் கொடுத்து நாங்கள் ஏமாற்றம் மாட்டோம் என்பது மக்களுக்குத் தெரியும்.
நல்ல நிர்வாகம் பற்றி பேசி வருகிறது பாஜக. சத்தீஸ்கரில் வறுமை நிலை கூடியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. இதுதான் நல்ல நிர்வாகமா? பாஜகவின் பேச்சு ஒன்றாகவும், செயல் வேறு மாதிரியாகவும் இருக்கிறது" என்றார் சோனியா காந்தி.