

வரும் 15-ம் தேதி இந்தியா 70-வது சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் ஒரு நிமிட அனிமேஷன் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டது. அதன் தொடக்கத்தில், போர் விமானங்கள் பறப்பது போன்றும் சில வினாடிகளில் மூவர்ண கொடி விரிந்து அழகாக பறப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றன.
ஆனால், வீடியோவில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள போர் விமானங்கள் இந்தியாவுக்கு சொந்தமானவை அல்ல. அவை பாகிஸ்தானின் ஜேஎப்-17 ரக போர் விமானங்கள் என்று ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் உடனடியாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, ‘‘கவனக்குறைவாக அந்த வீடியோவில் பாகிஸ்தான் விமானங்கள் இடம்பெற்றுவிட்டன. மேலும், பாகிஸ்தானின் ஜேஎப்-17 ரக போர் விமானமும் இந்தியாவின் தேஜாஸ் போர் விமானமும் பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும். இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிப்பது சாதாரண பொதுமக்களுக்கு கடினம். எனினும், தகவல் அறிந்தவுடன் ட்விட்டரில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டுவிட்டது’’ என்று தெரிவித்தன.
சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து ஜேஎப்-17 ரக போர் விமானத்தை உருவாக்கி உள்ளன. இந்த விமானத்தை வாங்குவ தற்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்த இலங்கை அரசு, தற்போது இந்தியாவின் தேஜாஸ் போர் விமானத்தை வாங்க ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் விளம்பரங்களில் தவறுதலாக மற்ற நாட்டு ராணுவ அம்சங்களை வெளியிடுவது இந்திய, பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் கப்பற்படை ஒத்திகை தொடர்பாக பத்திரிகைகளில் முழு பக்க விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் இந்திய போர்க் கப்பல்கள் இடம்பெற்றது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு முந்தைய 2010-ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட விளம்பரத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், கிரிக்கெட் வீரர் கபில் தேவுடன் பாகிஸ்தான் விமானப்படை தளபதி தன்வீர் முகமது அகமது இருப்பது போல் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.