பாரீஸ் பருவநிலை ஒப்பந்த விவகாரம்: ட்ரம்ப் தனது முடிவை மறு ஆய்வு செய்வார் - அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை

பாரீஸ் பருவநிலை ஒப்பந்த விவகாரம்: ட்ரம்ப் தனது முடிவை மறு ஆய்வு செய்வார் - அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை
Updated on
1 min read

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மறுஆய்வு செய்வார் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

மாநில பேரிடர் மீட்பு படைக்கான திறன் கட்டமைப்பு குறித்து 2 நாள் தேசிய மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இம்மாநாட்டை தொடங்கி வைத்து ராஜ்நாத் சிங் பேசும்போது, “பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியறுவது குறித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் முடிவு இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அமெரிக்கா தனது முடிவு மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறேன். எந்தச் சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் அவ்வாறு கூறினார் என்பதை அறியவேண்டும். ஒரு நாடு தனது நலனை மட்டுமே பார்க்குமேயானால் அது இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு கவலை தரக்கூடிய விஷயமாகும்” என்றார்.

ட்ரம்ப் கடந்த 1-ம் தேதி பாரீஸ் ஒப்பந்தம் குறித்த தனது முடிவை அறிவித்தார். அப்போது அவர், இந்த ஒப்பந்தத்தை ஏற்க வேண்டுமானால் முன்னேறிய நாடுகள் பல லட்சம் கோடி டாலர்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே இந்தியா கையெழுத்திட்டது” என்று ட்ரம்ப் கூறினார்.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறும்போது, “பணத்துக்கு ஆசைப்பட்டோ அல்லது அச்சத்தின் காரணமாகவோ இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் உள்ள உறுதி காரணமாகவே கையெழுத்திட்டது. உடன்பாட்டில் அமெரிக்கா இருந்தாலும் சரி இல்லா விட்டாலும் சரி இந்தியா அங்கம் வகிக்கும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in