

மும்பை போலீஸுக்கு பெண் ஒருவர் செய்த மின்னஞ்சலில் விமானக் கடத்தல் சதிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி அனுப்பியதையடுத்து சென்னை, மும்பை, ஹைதராபாத் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்று விமான நிலையங்களிலும் விமானக் கடத்தல் நாடகம் நடத்தப்படலாம் என்ற மிரட்டலையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மும்பை போலீஸுக்கு இந்த மின்னஞ்சல் சனிக்கிழமையன்று வந்துள்ளது
அந்த மின்னஞ்சலில், அந்தப் பெண், இந்த 3 விமானநிலையங்களிலிருந்தும் விமானத்தைக் கடத்த 6 பேர் பேசிக்கொண்டதை தான் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மின்னஞ்சலை மும்பை போலீஸ் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளுடன் பகிர்ந்து கொண்டது. இதனையடுத்து இந்த விமான நிலைய அதிகாரிகள் ஒன்று கூடி உச்சபட்ச எச்சரிக்கையுடன் பாதுகாப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சி.எஸ்.ஐ.எஃப் தலைமை இயக்குநர் ஓ.பி.சிங் பிடிஐ-யிடம் தெரிவிக்கும் போது, “பாதுகாப்பு அமைப்புகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன, மேம்படுத்தப்பட்ட எச்சரிக்கை மற்றும் சோதனை நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.
மேலும் சி.எஸ்.ஐ.எஃப். மோப்ப நாய்களையும் விமான நிலையங்களுக்கு அழைத்து வந்துள்ளனர். விமான சேவை நிறுவனங்களும் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு, விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால் ஒருவரும் பதற்றமடைய வேண்டாம் பயணிகளுக்கு எந்தவிதத்திலும் இடையூறு செய்யப்படாது என்று மூத்த அதிகாரி தெரிவித்தார்.
மின்னஞ்சல் உள்ளடக்கங்கள் குறித்து விசாரித்து வரும் போலீஸார் மின்னஞ்சல் அனுப்பியவருடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.