பஞ்சமி தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்: திருச்சானூர் கோயில் பிரம்மோற்சவம் நிறைவு

பஞ்சமி தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்: திருச்சானூர் கோயில் பிரம்மோற்சவம் நிறைவு
Updated on
1 min read

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று மதியம் பத்ம குளத்தில் பஞ்சமி தீர்த்தம் நிகழ்ச்சி வைபோகமாக நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். இந்நிகழ்ச்சியுடன் 9 நாட்களாக நடைபெற்ற பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.

அலர்மேலு மங்கை தாயார் என அழைக்கப்படும் பத்மாவதி தாயாரின் கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் நாளான நேற்று காலை, தான் அவதரித்த பத்ம சரோவரம் எனப்படும் கோயில் வளாகத்தில் உள்ள பத்ம குளத்தில் பத்மாவதி தாயர் திருமஞ்சன நீராடினார். இவரது பிறந்த நட்சத்திரமான கார்த்திகை மாத பஞ்சமி நட்சத்திரத்தில் இந்த பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

நேற்று காலை பஞ்சமி தீர்த்தத்தையொட்டி, திருமலை யில் இருந்து ஏழுமலையானின் காணிக்கையாக பச்சை மரகத கற்கள் பொதித்த தங்க அட்டிகை மற்றும் பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம் ஆகிய சீர்வரிசைகள் இரண்டு யானைகள் மீது திருமலையில் இருந்து திருச்சானூருக்கு கொண்டுவரப்பட்டன. இந்த சீர்வரிசைகள், திருப்பதி கோதண்டராம சுவாமி, கோவிந்த ராஜ சுவாமி கோயில்கள் வழியாக திருச்சானூருக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர், உற்சவரான பத்மாவதி தாயார் மற்றும் சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஊர்வலமாக கோயில் அருகே உள்ள பத்ம குளத்துக்கு கொண்டு வந்தனர். பிறகு அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிறகு காலை 11.45 மணியளவில் குளத்தில் புனித நீராடும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக காத்திருந்த பக்தர்கள் `கோவிந்தா.. கோவிந்தா’ எனும் பக்த கோஷத்துடன் புனித நீராடினர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால், இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு, திருப்பதி நகர எஸ்.பி. கோபிநாத் ஜெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவாறு ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in