Published : 21 Jun 2015 09:30 AM
Last Updated : 21 Jun 2015 09:30 AM

பிரதமர் மோடி தலைமையில் முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்: டெல்லியில் 35,000 பேர் பங்கேற்பு

முதல் சர்வதேச யோகா தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் யோகா தின நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், 35,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சர்வதேச யோகா தினத்தை அதிகாரபூர்வமாக்கிய ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, மக்களுடன் இணைந்து யோகா செய்தார். இந்த தினத்தையொட்டி, மேடையில் பேசுவார் என்று மட்டும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே யோகா செய்தது கவனிக்கத்தக்கது.

யோகா குரு ராம்தேவ், மதத் தலைவர்கள், யோகா ஆசிரியர்கள் மோடியுடன் மேடையில் இருந்தனர். சிறிது நேரத்தில் மேடையிலிருந்து கீழே வந்து மக்களோடு சேர்ந்து மோடியும் 30 நிமிடங்கள் யோகப் பயிற்சி செய்தார்.

படம்: ஏஎஃப்பி

நல்லிணக்கத்தைப் பரப்பும் முயற்சி: மோடி

நிகழ்ச்சியை துவக்கி வைத்த நரேந்திர மோடி, "இது மக்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமைப்படுத்தவே ஆரம்பிக்கப்பட்டது. உலகத்தை பதற்றமில்லாத இடமாக மாற்றவும், நல்லிணக்கம் ஏற்படவும் யோகா உதவி செய்யும்.

யோகா வெறும் உடல் வலிமைக்காக மட்டுமல்ல. அப்படி எண்ணுவது பெரிய தவறு. அவ்வாறாக இருப்பின் சர்க்கஸில் வேலை செய்யும் அனைவரும் யோகிகள் என அழைக்கப்படுவார்கள். உடலை இலகுவாக ஆக்குவது மட்டும் யோகாவின் வேலையல்ல.

இப்போது நாம் இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதோடு மனிதனின் மனதை பயிற்றுவிக்கிறோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் புதிய சகாப்தத்தை தொடங்குகிறோம். இது தொடர்ந்து நடக்கும். இது மனிதகுலத்துக்கான நிகழ்ச்சி. நல்லிணக்கத்தை பரப்ப, பதற்றம் இல்லாத உலகை உருவாக்கும் முயற்சி" என்றார் மோடி.

படம்: ஏபி

புதுடெல்லியின் ராஜபாதையில் குவிந்திருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த மோடி, ராஜபாதை, யோகபாதையாக மாறும் என யாரேனும் நினைத்ததுண்டா என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளிடம் மோடி கலந்துரையாடினார்.

யோகா தினம் உருவானது எப்படி?

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, ஐ.நா. கூட்டத்தில் முதல்முறையாகப் பேசினார். அப்போது, உடல்நலம், மனநலம் இரண்டையும் சிறப்பாக வைத்துக்கொள்ள உதவும் இந்தியாவின் தொன்மையான யோகாவுக்கென தனி தினம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா. சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இதற்கு 177 நாடுகள் ஆதரவு அளித்தன.

அதன்படி, முதல்முறையாக ஜூன் 21-ம் தேதியான இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக டெல்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். முக்கிய பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதால், குடியரசு தின விழாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு போல, யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

படம்: ஏபி

பலத்த பாதுகாப்பு:

இதுகுறித்து டெல்லி போலீஸ் ஆணையர் பி.எஸ்.பாஸி கூறும்போது, "யோகா தின கொண்டாட்டம் நடைபெறும் ராஜபாதை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. டெல்லி போலீஸார் உட்பட ஆயுதம் ஏந்திய 5,000 பாதுகாப்பு வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 18 காவல் துணை ஆணையர்கள் மற்றும் 30 கம்பெனி படைகள் குவிக்கப்பட்டன. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மோப்ப நாய்கள் உதவியுடன் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்களும் தீவிர சோதனை நடத்தினர்" என்றார்.

டெல்லி ராஜபாதையில்...

டெல்லி ராஜபாதையில் 35 நிமிடம் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், ஆயிரக்கணக்கான யோகா பயிற்சியாளர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இன்று காலை 7 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான அதிகாரிகள், 5,000 மாணவ, மாணவிகள் யோகா பயிற்சி செய்தனர்.

இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் புதிதாக தொடங்கப் பட்டுள்ள மத்திய 'ஆயுஷ்' அமைச்சகம் செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க 152 வெளிநாட்டுத் தூதரகங்களின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றதால், இதை ஒருங்கிணைத்து நடத்தும் ஆயுஷ் அமைச்சகம், இந்த நிகழ்வை கின்னஸ் உலக சாதனையாக மாற்ற திட்டமிட்டது.

யோகா நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்க்க வசதியாக ராஜபாதை நெடுகிலும் பெரிய அளவில் 2,000 டிஜிட்டல் திரைகளை அமைத்தது அரசு.

யோகா நிகழ்ச்சி லக்னோ, கொல்கத்தா, பாட்னா ஆகிய இடங்களிலும் நடைபெற்றன. இவை தூர்தர்ஷனிலும் இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.

முன்னதாக, யோகா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ராஜபாதை பகுதியில் போக்குவரத்து கடந்த 14-ம் தேதியே மாற்றப்பட்டது. அதன்படி ராஜபாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதன்பின், தினந்தோறும் அங்கு யோகா ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x