நாடாளுமன்றத் துளிகள்: கங்கையை மாசுபடுத்தினால் தண்டனை

நாடாளுமன்றத் துளிகள்: கங்கையை மாசுபடுத்தினால் தண்டனை
Updated on
2 min read

மாநிலங்களவையில் கேள்வி நேரம் மற்றும் இதர அலுவல் நேரங்களில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் நேற்று அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:

கிராம சாலைத் திட்டம்

ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் ராம் கிருபால் யாதவ்:

பிரமதரின் கிராம சாலை இணைப்புத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள சாலைத் திட்டங்கள் வரும் 2019-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும். அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கூட்டணி அரசு இத்திட்டத்துக்கான நிதியைக் குறைத்து விட்டது. தற்போது மீண்டும் நிதியை அதிகரித்திருக்கிறோம். பிஹார் மாநிலம் இத்திட்டத்தின் கீழ் மந்தமாக செயல்படுகிறது.

மாசுபடுத்தினால் தண்டனை

நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் உமா பாரதி:

கங்கை மாசுபடுவதற்கு அதில் மிதக்கவிடப்படும் மத சடங்குகள் சார்ந்த பொருட்கள் காரணமல்ல. ஆற்றில் கலக்கவிடப்படும் சாக்கடை, தொழிற்சாலை கழிவு நீர் ஆகியவைதான் முக்கியக் காரணம். கங்கை பல ஆண்டுகளாக மாசுபடுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அது குறித்த கவலை இருக்கிறது. கங்கை நதியை மாசுபடுத்துவதற்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வர திட்டமிட்டு வருகிறோம். நதிக்கரையில் 764 தொழிற்சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுடன் ஆலோசித்து சட்டம் இயற்றப்படும்.

தேசிய வனக் கொள்கை

சுற்றுச் சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே:

போபாலில் உள்ள இந்திய வன மேலாண்மை நிறுவனத்திடம் (ஐஐஎஃப்எம்) தேசிய வனக் கொள்கை வரைவை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. ஐஐஎஃப்எம் அந்த வரைவை சமர்ப்பித்துள்ளது. மத்திய வனத்துறை அமைச்சகம் அதனைப் பரிசீலித்து வருகிறது.

சுற்றுச்சூழல், வனம், கடலோர பாதுகாப்பு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் விதிமீறல்களுக்காக கடந்த 2 ஆண்டுகளில் எவ்வித அபராதமும் வசூலிக்கப்படவில்லை.

எரிசக்தி துறைக்கு நிதியுதவி

மின்சாரம், நிலக்கரித் துறை அமைச்சர் பியூஸ் கோயல்:

30,983.70 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை திட்டங்களுக்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் ஒத்துழைப்பு நல்குகின்றன. இத்திட்டங்களுக்காக 2016 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி முறையே ரூ. 78,829.69 கோடி மற்றும் ரூ. 33,482.83 கோடி நிதி ஒதுக்கியுள்ளன. ஒட்டுமொத்தமாக 23 பொதுத்துறை, 7 தனியார் துறை வங்கிகளும், வங்கியல்லா நிதி நிறுவனங்களில் 4 பொதுத்துறை மற்றும் 2 தனியார் நிறுவனங்களும் 76,350 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க உடன்பட்டுள்ளன.

சேதுசமுத்திரம் திட்டம்

கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்:

சேதுசமுத்திரம் திட்டத்துக்கு 2013-14-ம் நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2014-15-ம் நிதியாண்டில், ரூ.50 லட்சமும், 2015-16-ம் நிதியாண்டில் ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் நிதியெதுவும் ஒதுக்கப்படவில்லை. மாற்றுப்பாதையில் அமைப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

வரும் 2020-ம் ஆண்டுக்குள் கடல்வழி சரக்குப் போக்குவரத்தை 10 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் குளச்சல், மேற்கு வங்கத்தின் சாகர், ஆந்திரப்பிரதேசத்தில் துர்காராஜபட்டனம், மகாராஷ்டிரத்தில் வாதவான் ஆகிய நான்கு துறைமுகங்களை அமைப்பதில் மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது.

சோலார் தகடு இறக்குமதி

மின்சாரத் துறை அமைச்சர் பியூஸ் கோயல்:

சோலார் தகடுகள் இறக்குமதி அதிகரித்துள்ளது. 2014-15-ம் நிதியாண்டில் ரூ. 5,051 கோடியாக இருந்த இறக்குமதி, 2015-16-ல் மூன்று மடங்கு அதிகரித்து, ரூ.15,523 கோடியாக உயர்ந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.936 கோடிக்கு இறக்குமதியாகியுள்ளது. அமெரிக்கா, சீனாவைச் சேர்ந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சோலார் தகடுகள், பொருத்துச்சட்டங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை, உள்நாட்டு உற்பத்தியாளர்களை விட குறைவான விலைக்குக் கிடைக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in