நாட்டின் முடிவெடுக்கும் திறனைக் காட்டியது தெலங்கானா: பிரதமர்

நாட்டின் முடிவெடுக்கும் திறனைக் காட்டியது தெலங்கானா: பிரதமர்
Updated on
1 min read

தெலங்கானா மசோதாவை நிறைவேற்றியதன் மூலம், நம் நாட்டுக்கு கடுமையான முடிவுகளை எடுக்கும் திறன் உள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

15-வது மக்களவைக் கூட்டத் தொடர் கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தெலங்கானா மசோதா நிறைவேற்றப்பட்ட விதம், இந்தியாவின் முடிவெடுக்கும் திறனுக்கு மற்றொரு உதாரணம் என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் வழக்கமான அமளி துமளிகள், உரக்க எழுப்பப்படும் கோஷங்கள் முதலான எவ்வித இடையூறும் இல்லாமல் கடைசி நாளில் அமைதியும் ஒழுங்கும் நிலவியது. மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருடன் பிரதமர் மன்மோகன் சிங்கும் தனது கருத்துகளை முன்வைத்தார்.

கடும் அமளியும் பதற்றமும் நிறைந்த நிலையில் இருந்து வெளியேறி, புதிய இணக்கமான சூழல் பிறக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளையும், நிறைகளையும், குறைகளையும் சீர்தூக்கிப் பார்த்து, மக்கள் எதிர்வரும் தேர்தல் மூலம் அரசை மதிப்பீடு செய்வார்கள் என்று பிரதமர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

அவை நடவடிக்கைகள் பாதிப்பதைத் தவிர்க்க சுஷில்குமார் ஷிண்டே மேற்கொண்ட முயற்சிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் ஒத்துழைப்புக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

கடந்த 5-ஆம் தேதி இந்தக் கூட்டத் தொடர் தொடங்கியது முதலே சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் இருந்தது. தெலங்கானா விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சினை, டெல்லியில் அருணாச்சல் மாணவர் பலியான சம்பவம் என அவை ஒத்திவைக்கப்பட காரணங்கள் நிறையவே இருந்தன.

உச்சபட்ச அத்துமீறல்களும், அவை மரபு மீறல்களும் அரங்கேறின. சீமாந்திரா எம்.பி. லகடாபதி ராஜகோபால் பெப்பர் ஸ்ப்ரே தெளித்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அமளி, கூச்சல், குழப்பம், ஒத்திவைப்பு, நடவடிக்கைகள் என கூட்டத்தொடர் ஒருவழியாக முடிந்துவிட்டது. தெலங்கானா பிரச்சினையின்போது, அவை நடவடிக்கைகள் இதயத்தில் இருந்து ரத்தம் வழியச் செய்கிறது என பிரதமர் மன்மோகன் சிங் வேதனை தெரிவித்திருந்தார்.

அமளிக்கு மத்தியில் இடைக்கால ரயில்வே பட்ஜெட், மத்திய பட்ஜெட், தெலங்கானா மசோதா நிறைவேறியுள்ளன. ஆனால் ராகுல் காந்தி பரிந்துரைத்து வந்த ஊழலுக்கு எதிரான 6 மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை. அதேவேளையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சர்ச்சைக்குரிய தெலங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in