

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறவினர் கருணா சுக்லா (63) காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜனார்தன் துவிவேதி, மோதிலால் வோரா, ஹரிபிரசாத், அஜித் ஜோகி, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோர் டெல்லியில் வியாழக்கிழமை கூட்டாக அறிவித்தனர். அப்போது உடன் இருந்த கருணா சுக்லா நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒரு கணவனாக மனைவிக்கு உரிய கடமைகளை நிறைவேற்றவில்லை. ஒரு மாநில முதல்வராக மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றவில்லை. அவர் எவ்வாறு நாட்டுக்கு சேவையாற்ற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கருணா சுக்லா கடந்த அக்டோபர் 25-ம் தேதி பாஜகவில் இருந்து விலகினார். அண்மையில் அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸில் முறைப்படி இணைந்துள்ளார்.