

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெறும் உறியடி திருவிழாவில் 20 அடிக்கும் உயரமாக மனித பிரமிடு அமைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவில் மாற்றம் கோரி, யோகேஸ்வரி உறியடி திருவிழா (தாஹி கண்டி) அறக்கட்டளை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் அனில் ஆர்.தவே, யு.யு.லலித். எல். நாகேஸ்வர ராவ் ஆகியோரடங்கிய அமர்வு, “கடந்த விசாரணையின்போது, மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் இதர பகுதிகளில் நடைபெறவிருக்கும் அதிகப்படியான எண்ணிக்கை யிலான உறியடி திருவிழா நிகழ்ச்சிகளை எப்படி ஒழுங்குபடுத்தப் போகிறீர்கள் என மாநில அரசைக் கேட்டிருந்தோம்” என கேள்வி எழுப்பியது.
அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தத்தாவிடம் நீதிபதிகள், “1,500 அமைப்புகள் சார்பில் நடக்கும் உறியடி நிகழ்ச்சியில் மனித பிரமிடு அமைப்பவர்களின் பாதுகாப்புக்கு நீங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது” என தெரிவித்தனர்.
முடிவில், 20 அடிக்கு மேல் மனித பிரமிடு அமைக்கக் கூடாது என்ற தங்களது முந்தைய உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.