

‘இந்தியாவின் அடித்து நொறுக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரம்’ என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தலையங்கத்தில் சமீபத்திய என்.டி.டிவி மீதான அதிரடி சோதனைகளை விமர்சித்து எழுதப்பட்டிருந்தது.
இதனையடுத்து அதன் ஆசிரியருக்கு கடிதம் அனுப்பிய சிபிஐ, “இந்தியாவுக்கு உங்களிடமிருந்து பத்திரிகை சுதந்திரம் குறித்த பாடங்கள் தேவையில்லை. எங்கள் சமூக நிறுவனங்களும் மரபுகளும் பல்படித்தான வளமையான பண்பாடுகளாலும் ஜனநாயக அறங்களாலும் ஊட்டி வளர்க்கப்பட்டவை” என்று கூறியுள்ளது.
சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர்.கே.கவுர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அந்தத் தலையங்கத்தில், “ரெய்டுகள் (என்.டி.டிவி) பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் செய்தி ஊடகங்கள் மீதான எச்சரிக்கை மணி ஒலிக்கும் புதிய வகை அச்சுறுத்தல்களின் அடையாளம்” என்று விமர்சித்திருந்தது.
மேலும், பதான்கோட் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை குறித்து என்.டி.டிவி வெளியிட்ட சில தகவல்களையடுத்து அதன் இந்திச் சேனல் ஒருநாள் முழுதும் ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டது என்பதை நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் கவுர், ஒருநாள் முழுதும் என்.டி.டிவி தொலைக்காட்சியின் இந்தி சேனல் ஒளிபரப்ப விதிக்கப்பட்ட தடை முடிவு என்.டி.டிவியும் பங்கேற்ற முறையான விசாரணைக்குப் பிறகே எடுக்கப்பட்டது. பயங்கரவாதச் சம்பவங்கள் குறித்து பொறுப்பற்ற முறையில் செய்தி அளிப்பதை எந்த ஒரு ஜனநாயகமும் பொறுத்துக் கொள்ளாது, என்று குறிப்பிட்டிருந்தார்.