

பிரதமரின் ரஷ்ய சுற்றுப் பயணத்தின்போது கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகளை அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக, அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பது மற்றும் இழப்பீட்டுத் தொகையை யார் தருவது என்பது குறித்து இப்போது பேச்சு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சுமுக உடன்பாடு ஏற்பட்டால், அணு உலைகள் தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். பிரதமர் மன்மோகன் சிங், ரஷ்யாவுக்கு வரும் திங்கள்கிழமை (அக்டோபர் 21) சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டுத் தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதின் பங்கேற்கும் மாநாட்டில் மன்மோகன் கலந்து கொள்கிறார். ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, சீனாவுக்கு மன்மோகன் செல்வார். சீனாவுடனான எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடுகிறார்.