

ஹைதராபாத்தில் உள்ள ஏர்கூலர் கிடங்கில் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் பீஹாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 6 பேர் பலியாகினர்.
ஹைதராபாத், ரங்காரெட்டி மாவட்டம், அத்தாபூரில் உள்ள ராஜேந்திர நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஏர் கூலர் கிடங்கு உள்ளது. இதில் பாட்டரியில் இயங்கும் வாகனங்களும் இருந்தன. இந்தக் கிடங்கில் பீஹார் மாநிலத்தை சேர்ந்த 12 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்தக் கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. ஏர் கூலர்களுக்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோல்கள் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென வேகமாக பரவியது. இதில் கிடங்கில் தூங்கிக் கொண்டிருந்தவர்களில் 6 பேர் வெளியே உடனடியாக தப்பிக்க முடியாமல் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தார் கொடுத்த தகவில்படி தீயணைப்பு படையினர், போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.
இந்த விபத்து குறித்து ரங்காரெட்டி மாவட்ட போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.