மக்களவையில் 3-வது நாளாக மாநில சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர எம்.பி.க்கள் அமளி

மக்களவையில் 3-வது நாளாக மாநில சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர எம்.பி.க்கள் அமளி
Updated on
1 min read

ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில் மூன்றாவது நாளாக அமளியில் ஈடுபட்டனர். அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினரான தெலுங்கு தேசம் கட்சியினர் அமைதி காத்தனர்.

மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து, “நீதி வேண்டும்”, “ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து” போன்ற கோஷங்களை எழுப்பினர்.

அப்போது மக்களவை அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், “நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் அறிக்கைக்குப் பிறகும் ஏன் போராட்டத்தில் ஈடுபடுகிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பினார். நேற்று முன்தினம் இதுதொடர்பாக பேசிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இவ்விவகாரம் அரசின் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மதியம் பூஜ்ஜிய நேரம் எடுத்துக் கொள்ளப்படும் வரை தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாகவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் இதுதொடர்பாக பிரச்சினை எழுப்பி வருகின்றனர். தெலங்கானா பிரிவினைக்குப் பிறகு ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் எனக் கோரி, பதாகைகளைக் காண்பித்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவைக்குள் போராட்டம் நடத்த, தெலுங்கு தேசம் கட்சியினர் வெளியில் போராட்டம் நடத்தினர்.

தெலங்கானா பிரிவினைக்குப் பிறகு, போதிய நிதியை ஆந்திராவுக்கு ஒதுக்கீடு செய்யாதது குறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் நரேந்திர மோடி அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.

பாஜக, தெலங்கு தேசம் கட்சியிடையே ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என். சந்திரபாபு நாயுடு வெளியேறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in