

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வரும் 12-ம்தேதி சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
பெங்களூருவில் அவர் நேற்று கூறியதாவது:
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளோம். தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பில் மாற்றங்கள் கோரி உச்ச நீதிமன்றத்தில் வரும் 12-ம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்கிறோம். கர்நாடகாவின் உண்மை நிலையை உச்ச நீதிமன்றம் அறியும் வகையில் சட்ட நிபுணர்கள் சீராய்வு மனுவை தயாரித்து வருகின்றனர் என்றார்.
கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் அரவிந்த் ஜாதவ் மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசி சேகருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப் பதாவது: கர்நாடகாவில் பருவ மழை பொய்த்ததால் காவிரியின் குறுக்கேயுள்ள அணைகளில் போதிய நீர் இல்லை. தற்போது உள்ள நீர் கர்நாடகாவின் குடிநீருக்கு மட்டுமே போதுமா னதாக இருக்கும். தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளதால் அணைகளில் நீர் இருப்பு குறைந் துள்ளது. எனவே தமிழகத்துக்கு காவிரி நீரை தொடர்ந்து திறந்துவிட முடியாத நிலை நிலவுகிறது. மேட்டூர் அணையில் உள்ள 35 டிஎம்சி நீர் தமிழகத்தின் சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்கும்.
காவிரி நதி நீர் பங்கீட்டில் உண்மை நிலையை அறிய கர்நாடகா மற்றும் தமிழகத்தில் காவிரி பாசனப் பகுதிகள் மற்றும் அணைப்பகுதிகளில் மத்திய நீர்வள நிபுணர் குழு ஆய்வு நடத்த வேண்டும். இந்த குழு இரு மாநிலங்களிலும் நீர் இருப்பு, பாசன தேவை, குடிநீரின் தேவை குறித்து முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும். எனவே அவசரமாக நிபுணர் குழுவை அனுப்ப வேண்டும். இந்த குழுவின் அறிக்கை தாக்கல் செய்த பிறகே காவிரி கண்காணிப்புக் குழு இவ்வழக்கில் முடிவை எடுக்க வேண்டும். காவிரி கண்காணிப்பு குழுவின் அறிக்கைக்கு பிறகே, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.