Published : 17 Mar 2017 05:05 PM
Last Updated : 17 Mar 2017 05:05 PM

திரிணமூல் கட்சிக்கு எதிரான நாரதா டேப் குறித்து சிபிஐ விசாரணை: கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் பிரபல தொழிலதிபர்களிடம் பணம் வாங்கியது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது கொல்கத்தா உயர் நீதிமன்றம்.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது ஆளும் திரிணமூல் கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த போலீஸ் உயரதிகாரி மிர்சா ஆகியோர் தொழிலதிபர்களிடமிருந்து பணம் வாங்கியதை மறைந்திருந்து வீடியோவாக பதிவு செய்தது நாரதா செய்தி நிறுவனம். அந்தக் காட்சிகளை அப்போதே வெளியிட்டதால் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கற்பனையான ஒரு நிறுவனத்தின் பெயரைக் கூறி நிதி அளிப்பவர்கள் போல் வந்தவர்களிடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எம்.பி.க்கள் 6 பேர், 3 அமைச்சர்கள், போலீஸ் உயரதிகாரி, கொல்கத்தா நகர மேயர் ஆகியோர் பணம் பெற்றுக்கொண்ட காட்சிகள் ரகசிய கேமராவில் பதிவானது.

இது தொடர்பான வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி நிஷிதா மஹாத்ரே, தபபிரதா சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் வந்த போது, “முதல் தோற்றத்தில் குற்றம் இழைக்கப்பட்டதாகவே நாங்கள் கருதுகிறோம் எனவே இது குறித்த தொடக்க விசாரணைகளை சிபிஐ விசாரிக்க உத்தரவிடுகிறோம்” என்றனர் நீதிபதிகள்.

மேலும் சிபிஐ விசாரணை மேற்கொண்டு 3 நாட்களில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், வீடியோ டேப்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப் படவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்: முதல்வர் மம்தா பானர்ஜி

சிபிஐ விசாரணை உத்தரவு தொடர்பாக கொல்கத்தா நகரில் பேட்டியளித்த முதல்வர் மம்தா, இது தொடர்பாக கொல்கத்தா போலீஸார் உரிய விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதிக்காமல் போனதும், விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைத்ததும் துரதிர்ஷ்டவசமானது என்றார்.

மேலும் இந்த வீடியோவை பாஜக தலைமை அலுவலகத்திலிருந்துதான் வெளியிடப்பட்டது, இது பற்றி மம்தா கேள்வி எழுப்பியபோது, “சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று மாநில பாஜக தலைவருக்கு எப்படி முன் கூட்டியே தெரியும்? எனவே உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x