சத்ருஹனுக்கு கறுப்புக் கொடி: இளைஞர்களுக்கு அடி

சத்ருஹனுக்கு கறுப்புக் கொடி: இளைஞர்களுக்கு அடி
Updated on
1 min read

பிஹாரில் பாஜக வேட்பாளரும் ஹிந்தி நடிகருமான சத்ருஹன் சின்காவுக்கு கறுப்புப் கொடி காட்டிய இளைஞர்களை பாஜகவினர் அடித்து உதைத்தனர். இந்த சம்பவத்தால் பாட்னாவில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்த விவரம்:

பிஹாரின் பாட்னா சாஹிப் தொகுதி எம்.பி.யாக உள்ள சத்ருஹன் சின்காவுக்கு பாஜக மீண்டும் அதே தொகுதியை ஒதுக்கியது. இதையடுத்து அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார்.

அப்போது லோகித் விகாஸ் மன்ஞ் என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கார்கில் சௌக் பகுதியில் கூடி நின்று சத்ருஹன் சின்காவுக்கு கறுப்புக் கொடி காட்டினர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த பாஜகவினர் அந்த இளைஞர்களை பிடித்து அடித்து உதைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அடி, உதை காட்சிகள் தொலைக்காட்சி செய்தி சேனல்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக நேற்று முன்தினம் பாஜக அலுவலகத்துக்கு வந்த சத்ருஹன் சின்காவுக்கு சிலர் கறுப்பு கொடி காட்டினர். அப்போதும் சின்காவின் ஆதரவாளர்கள் அவர்களை அடித்து உதைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோத்வாலி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் சத்ருஹன் சின்ஹாவின் ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. சத்ருஹன் சின்ஹா பெயரும் அதில் இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக சத்ருஹன் சின்கா கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை. கறுப்புக் கொடி காட்டியவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள், ஏன் கறுப்புக் கொடி காட்டினார்கள் என்பது தெரியவில்லை என்று சத்ருஹன் சின்கா வேட்பு மனு தாக்கலின்போது உடனிருந்த பாஜக எம்.எல்.ஏ. நிதின் நவீன் கூறினார். அந்த இளைஞர்கள் குடிபோதை யில் இருந்தனர் என்று பாஜகவைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ. பாட்டீல் தெரிவித்தார்.

எனினும் சத்ருஹன் சின்கா மீண்டும் பாட்னா சாஹிப் தொகுதி யில் போட்டியிட பாஜகவின் ஒரு பிரிவினரிடையே எதிர்ப்பு உள்ளது. முக்கியமாக பிஹாரைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் பாட்னா சாஹிப் தொகுதியை கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே உள்கட்சி பிரச்சினை காரணமாகவும் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in