

நாட்டின் 2-வது சர்வதேச பேருந்து சேவை நேற்று தொடங்கப்பட்டது. புதுடெல்லியிலிருந்து நேபாள் தலைநகர் காத்மண்டுவிற்கான பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சுமார் 1,250 கிமீ தூரத்திற்கான இந்த சாலைவழிப் பயணத்திற்கு சுமார் 30 மணி நேரங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்த தினசரி சேவைக்கு வால்வோ அல்லது, ஜெர்மன் தயாரிப்பு மெர்சிடஸ் பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன.
டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் ஸ்டேடியம் முனையத்திலிருந்து இந்த சர்வதேச சேவையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நேபாளத்துடனான நமது உறவை வலுப்படுத்த பிரதமர் மோடியின் மற்றுமொரு முயற்சியாகும் இது என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.
நேற்று 20 பயணிகளுடன் சுவிஸ் வால்வோ பேருந்து காத்மண்டு புறப்பட்டுச் சென்றது.
யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை, ஆக்ரா, பிரோசாபாத், கான்பூர், லக்னோ, கோரக்பூர், மற்றும் சுனவ்லி வழியாக காத்மண்டு செல்கிறது இந்தப் பேருந்து.
ஒரு டிக்கெட் விலை ரூ.2,300 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புகைப்பட அடையாளம் பயணிகளிடத்தில் இருப்பது அவசியம்.
தினமும் காலை 10 மணியளவில் புறப்படும் இந்தப் பேருந்து இடையில் எங்கும் நிறுத்தப்பட மாட்டாது. பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுகளை 60 நாட்களுக்கு முன்னதாகவே புக் செய்து கொள்ளலாம் என்று டெல்லி போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.