

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் நேற்று கிரானைட் குவாரியில் குண்டுவெடித்து கற்கள் சரிந்ததில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குண்டூர் மாவட்டம், ஃபிரங்கிபுரம் பகுதியில் கிரானைட் குவாரி இயங்கி வருகிறது. இங்கு 15-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் அங்கு கற்களை வெட்டி எடுக்க வெடி வைக்கப்பட்டது. அப்போது ராட்சத அளவிலான கிரானைட் கற்கள் சிதறி கீழே விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே உயிரிழந் தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.