Published : 07 Feb 2017 08:06 AM
Last Updated : 07 Feb 2017 08:06 AM

கர்நாடக அரசு வழக்கறிஞரை திமுக இயக்குகிறதா?- தீர்ப்பு தேதி குறித்த அறிவிப்பு வெளியான பின்னணி

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் முதல்வர் கனவை தகர்க்கும் வகையில் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதன் பின்னணியில் கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஆச்சார்யாவை திமுக இயக்கியதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவசரமாக‌ அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா, அதே அவசரத்தில் தமிழக முதல்வராகவும் பதவியேற்க காய்களை நகர்த்தி வருகிறார். ஜெயலலிதா மறைந்த 60 நாட் களுக்குள் கட்சியையும் ஆட்சி யையும் சசிகலா கைப்பற்றிய தால், ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்நிலையில் சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்தில் வழங்கப் படும் என உச்ச நீதிமன்றம் திடீரென அறிவித்தது. இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு தகர்க்கப்படுவதற்கும் தள்ளிப் போவதற்கும் வாய்ப்பு உள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தீர்ப்பு நிலுவையில் இருந்த நிலையில், தற்போது தீர்ப்பு தேதி குறித்த அறிவிப்பு வெளியானதன் பின்னணியில் திமுக இருக்கிறது. கடந்த ஜூன் 7-ம் தேதியில் இருந்து அமைதி யாக இருந்த திமுக தரப்பும், அரசு தர‌ப்பும் திடீரென தீர்ப்பு குறித்து நினைவூட்டியது பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி யுள்ளது. அதாவது திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் அறிவுரை யின்படி, சொத்துக்குவிப்பு வழக் கில் ஆஜரான திமுக வழக்கறிஞர் கள் சிலர் இதற்கான காய் நகர்த் தல்களை மேற்கொண்டுள்ளனர்.

கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஆச்சார்யாவிடம் திமுக வழக்கறி ஞர்கள் நேற்று முன்தினம் பேசி யுள்ளனர். அப்போது ஆச்சார்யா விடம், “கர்நாடக அரசின் வழக் கறிஞர் என்ற முறையில் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக் கின் தீர்ப்பு குறித்து நினைவூட் டல் மனு தாக்கல் செய்யுமாறு'' வலியுறுத்தினர். அதன்படி ஆச்சார்யா மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே மூலமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் திடீரென ஆஜராகி தீர்ப்பு வெளியிடுமாறு கோரினார். இதைத் தொடர்ந்தே நீதிபதி பினாகி சந்திர கோஷ் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுகவின் செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று, “சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கு மீதான தீர்ப்புக்குப் பிறகு 4-வது முறையாக முதல்வர் ஆகும் வாய்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரும்'' என கூறியுள்ளார். இதன் மூலம் சசிகலா முதல்வராக பொறுப்பேற்றாலும், ஜெய லலிதாவைப் போல சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்படுவார். அவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டு, ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் ஆவார் என ஸ்டாலின் கூறியிருப்பது சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

சசிகலாவுக்கு தைரியமூட்டும் சட்டப்புள்ளிகள்

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதில் சசிகலா கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். முதல்வராக பொறுப்பேற்று சில தினங்களில் வழக்கில் தண்டிக்கப்பட்டால் என்ன செய்வது என ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் சசிகலா தனக்கு நெருக்கமான சட்ட நிபுணர்கள், மூத்த வழக்கறிஞர்கள் சிலரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறார். இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கை கவனித்த வழக்கறிஞர் செந்திலை உடனடியாக டெல்லிக்கு அனுப்பியுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள செந்தில், எக்காரணம் கொண்டும் தீர்ப்பு நமக்கு எதிராக வராது என சசிகலாவுக்கு தகவல் அனுப்பியுள்ளார். இதன் காரணமாகவே சசிகலா முதல்வராக பொறுப்பேற்பதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x