

உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் படுதோல்விக்குப் பிறகு சமாஜ்வாதி கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் அகிலேஷுக்கு எதிரெதிர் துருவமாக இருந்த அவரது சித்தப்பா சிவ்பால் யாதவ் புதிய கட்சி தொடங்க இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இந்தக் கட்சிக்கு முலாயம் சிங் யாதவ் தேசியச் செயலாளராக இருப்பார் எனவும் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. தேர்தலுக்கு முன்பாக முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது தந்தை முலாயம் சிங் யாதவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.
அகிலேஷுக்கும், அவரது சித்தப்பா சிவ்பால் யாதவுக்கும் இடையேயான மோதலால் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அகிலேஷை நீக்கினார் சிவ்பால். இதற்குப் பதிலடியாக சிவ்பாலை மாநில அமைச்சரவையில் இருந்து அகற்றினார் அகிலேஷ்.
தேர்தலில் சமாஜ்வாதிக்கு பெரும் தோல்வி ஏற்பட்டதற்கு அகிலேஷ், சிவ்பால் இடையே ஏற்பட்ட அதிகார போட்டியே காரணம் எனக் கட்சி நிர்வாகிகள் பலரும் குறை கூறிவருகின்றனர். அகிலேஷ் தலைமையில்தான் தேர்தலில் சமாஜ்வாதி களத்தில் இறங்கியது. ஆயினும் பாஜக, சமாஜ்வாதி கட்சியை வீழ்த்தி ஆட்சியில் அமர்ந்துள்ளது.
“அகிலேஷ் என்னை இழிவுபடுத்தியதால்தான் சமாஜ்வாதி தோல்வி அடைந்தது. தந்தைக்கு விசுவாசமாக இல்லாதவர்கள், மற்றவர்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார்கள் என்பதை வாக்காளர்கள் உணர்ந்து செயல்பட்டனர். அதுதான் சமாஜ்வாதிக்குத் தோல்வி ஏற்படக் காரணம்” என்று முலாயம் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
தோல்விக்குப் பொறுப்பேற்று தேசியத் தலைவர் பதவியிலிருந்து அகிலேஷ் விலகினால்தான் குடும்பத்திலும், கட்சியிலும் ஒற்றுமையை ஏற்படுத்தமுடியும் என்பது சிவ்பாலின் யோசனை. ஆனால், அகிலேஷின் ஆதரவாளரான ராம் கோபால் யாதவோ, எந்தச் சூழலிலும் அகிலேஷ் தேசியத் தலைவர் பதிவியிலிருந்து விலகமாட்டார், கட்சியையும் முலாயமிடம் ஒப்படைக்கமாட்டார் என அறிவித்தார்.
இதற்குப் பதிலடியாக அகிலேஷ் யாதவ் கட்சியை தந்தை முலாயம் சிங் யாதவிடம் ஒப்படைக்காவிட்டால், அடுத்த 3 மாதங்களில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக அவரது சித்தப்பா சிவ்பால் யாதவ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், யாதவ் குடும்பத்தாரின் செல்வாக்கு மிக்க எடாவா நகரில் நிருபர்களிடம் சிவ்பால் நேற்று கூறும்போது, “முலாயம் சிங் இழந்த கவுரவத்தை மீட்டெடுக்கும் வகையிலும், கட்சியின் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் வகையிலும் புதிய கட்சியின் அறிவிப்பு விரைவில் வெளிவரும். சமூக நீதிக்காக மதச்சார்பற்ற முன்னணி (சமாஜ்வாதி மதச்சார்பற்ற முன்னணி) உருவாக்கப்படும். இதன் தேசியச் செயலாளராக முலாயம் இருப்பார்’, என்றார்.
முன்னதாக, எடாவாவில் உள்ள உறவினர் வீட்டில் மைத்துனர் அஜந்த் சிங் யாதவுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதேநேரம், புதிய கட்சி தொடர்பான சிவ்பாலின் அறிவிப்புக்கு முலாயம் சிங் எந்தவிதமான விளக்கமும் தரவில்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிவ்பால், ஜஸ்வந்த்நகர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. சமாஜ்வாதி கட்சிக்குள் மீண்டும் பிளவு ஏற்பட்டு இருப்பது தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.