

தொடர்ந்து 4-வது நாளாக மும்பையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 40 அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த 40,000 மருத்துவர்கள் நடத்தும் போராட்டம் காரணமாக நோயாளிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
மருத்துவர்கள் மீதான, நோயாளியுடைய உறவினர்களின் தாக்குதல்களுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை மருத்துவர்கள் தொடங்கினர்.
மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
நோயாளிகள் வேதனை
மும்பையின் சியான் மருத்துவமனையில், மருத்துவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளியின் உறவினர் ஒருவர் கூறும்போது, "நான் மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். மருத்துவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக எனது குழந்தை இறந்துவிட்டால் நான் எங்கே செல்வேன்" என்றார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கூறும்போது, "மருத்துவர்கள் திங்கட்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அங்கு யாரும் இல்லை" என்று கூறினார்.