

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் முக்கிய தீவிரவாதியை பாதுகாப்பு படை யினர் நேற்று சுட்டுக் கொன்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து போலீஸ் வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள நக்ரி ஹத்முல்லா என்ற கிராமத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிர வாத அமைப்பின் முக்கிய தீவிரவாதிகளுள் ஒருவனான சமீர் அஹமது வானி என்கிற ஜான் சாஹிப் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்த போது, அஹமது வானி துப்பாக்கியால் சுட்டுத் தப்பிக்க முயன்றான். பதிலுக்கு பாது காப்பு படையினர் சுட்டதில் அஹமது வானி கொல்லப் பட்டான். தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து ஒரு ஏ.கே. 47 ரக துப்பாக்கியும், வெடிப்பொருட்களையும் பாது காப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
அஹமது வானி சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்த தும், அவரது சொந்த ஊரான சோப்பூரில் இளைஞர்கள் சிலர் சாலையில் சென்ற வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி னர். அப்போது குப்வாரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற் காக, பந்திபோராவில் இருந்து கைதியை ஏற்றிச் சென்ற போலீஸ் வாகனத்தையும் ஒரு கும்பல் வழிமறித்து தாக்குதல் நடத்தியது.
மேலும் அந்த வாகனத்துக்கு தீ வைத்தது. அதிர்ச்சி அடைந்த போலீஸார் கைதியுடன் வாகனத்தில் இருந்து குதித்து அருகில் உள்ள ஒரு வீட்டில் அடைக்கலம் புகுந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையில் மத்திய காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா என்ற பகுதியில் பாஜக பிரமுகர் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கியை, தீவிரவாதிகள் சிலர் பறித்துச் சென்றனர். அவர்களை பிடிக்க பாது காப்பு படையினர் உஷார்படுத்தப் பட்டுள்ளனர்.
ராஜ்நாத் சிங் ஆலோசனை
ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, பாதுகாப்பு படையினரை உஷார்நிலையில் வைக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அத்துடன் அமைதி நிலவுவதற்கான நடவடிக்கைகளையும் துரித கதியில் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், மத்திய உள்துறை செயலர் ராஜீவ் மெஹ்ரிஷி, உளவுத் துறை மூத்த அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த சனிக்கிழமை காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து பாதுகாப்பு நிலவரம் குறித்து நேற்று அவர் விவாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பிடிஐ