Published : 03 Nov 2014 08:56 AM
Last Updated : 03 Nov 2014 08:56 AM

கருப்பு பணம் விவகாரம்: பெயர்களை வெளியிடுவது விசாரணையை பாதிக்கும்; மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட்டால், அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்காமல் போவதுடன் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பேஸ்புக் இணையதளத்தில் கூறியதாவது:

அதிகாரபூர்வமற்ற முறையில் (வெளிநாடுகளுடன் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தை மீறி) கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட் டால், அவர்களுக்கு எதிரான ஆதாரம் கிடைக்காமல் போய் விட வாய்ப்புள்ளது. தங்களுட னான ஒப்பந்த விதிமுறைகளை மீறிவிட்டதாகக் கூறி, நமக்கு தேவையான கூடுதல் ஆதாரங் களை வெளிநாடுகள் தராது.

சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் வசம் உள்ள ஆதாரங்களை அழித்துவிடுவார்கள். அல்லது, தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சில ஆவணங்களை தயாரித்துவிடுவார்கள்.

போதிய ஆதாரமில்லாத நிலை யில், கருப்பு பணம் வைத்திருந் தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ, விசாரணை நடத்தவோ முடியாத நிலை ஏற்படும்.

பெயர்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துவதன் மூலம், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்காமல் போக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் கண் காணிப்பில் செயல்படும் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் எங்களிடம் உள்ள முழு பெயர் பட்டியலையும் அளித்துவிட்டோம். அவர்கள் உண்மையை வெளிக்கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

சமீபத்தில் ஜெர்மனியின் பெர்லி னில் நடைபெற்ற கூட்டமொன்றில் பணப் பரிமாற்றம் தொடர்பான விவரங்களை பகிர்ந்து கொள்வது குறித்த ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இக்கூட்டத்தில் இந்தியா பங்கேற்காததற்கு காரணம், நமது நாட்டுச் சட்டப்படி தகவல்களை வெளியிடாமல் ரகசியம் காப்பது என்பது அரசியல் சாசனத்துக்கு முரணானது என்ற கருத்து இங்கு நிலவுகிறது.

ஆனால், தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் வெளிநாடுகள் ஒப்பந்தத்தை ஏற்படுத்த முன்வருகின்றன. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்காத சூழ்நிலையில், அக்கூட்டத்தில் இந்தியா பங்கேற்கவில்லை.

இவ்வாறு அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x