காவிரியில் தமிழகத்துக்கு செப்.20 வரை 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு: பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமல்

காவிரியில் தமிழகத்துக்கு செப்.20 வரை 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு: பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமல்
Updated on
2 min read

200 தமிழக வாகனங்கள் எரிப்பு; துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம்; ராணுவ உதவி கோருகிறார் சித்தராமையா

தமிழகத்துக்கு வரும் 20-ம் தேதி வரை காவிரியில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று புதிய உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, வன்முறை வெடித்ததால் பெங்களூ ருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பதிவெண் கொண்ட நூற்றுக் கணக்கான வாகனங்கள் நேற்று தீயிட்டு கொளுத்தப்பட்டன.துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர்.

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகம் - கர்நாடகா இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “காவிரியில் தமிழகத்துக்கு தினமும் விநாடிக்கு 15,000 கன அடி நீரை 10 நாட்களுக்கு திறக்க வேண்டும்” என்று கடந்த 5-ம் தேதி கர்நாடக அரசுக்கு உத்தர விட்டது.

இதையடுத்து, கடந்த 7-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு கர்நாடக அரசு காவிரி நீரை திறந்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி களும், கன்னட அமைப்பினரும் கர்நாடகாவில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் கடந்த சனிக்கிழமை இரவு உச்ச நீதிமன்ற பதிவாளர் வீட்டுக்கு சென்று புதிய மனு ஒன்றை அளித்தனர். அதில், “அணைகளில் போதிய நீர் இல்லாததால் உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கர்நாடகாவில் வன்முறை வெடித்துள்ளதால் இரு மாநிலங்களுக்கிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே இம்மனுவை உடனே விசாரிக்க வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.

இதையடுத்து, கர்நாடக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் யூ.யூ.லலித் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன், “தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும்” என்றார்.

இதற்கு தமிழக அரசு வழக்கறி ஞர் சேகர் நாப்டே கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

நீதிபதிகள் கடும் கண்டனம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசும், மக்களும் மதித்து நடக்க வேண்டும். போராட்டம் நடத்துவதை காரண மாக காட்டி, காவிரி நீரை நிறுத்த உத்தரவிட முடியாது. சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுக்கக் கூடாது. உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்திருப்பது ஏற்கத்தக்க‌தல்ல. வரும் 20-ம் தேதி வரை தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும்” என்று கூறி, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 20-ம் தேதி மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.

உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு வரும் 17-ம் தேதி வரை அமலில் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 3 நாட்களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

தமிழகத்தின் சில இடங்களில் கர்நாடக வாகனங்கள் தாக்கப் பட்டன. இதுபோல, கர்நாடகாவில் தமிழக பதிவெண் கொண்ட 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நேற்று தீயிட்டு கொளுத்தப்பட்டன.

உச்ச நீதிமன்ற உத்தரவு வெளி யான அடுத்த கணமே கர்நாடகாவில் கன்னட அமைப்பினரும், விவசாயி களும் போராட்டத்தில் குதித்தனர். பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலை, பெங்களூரு - ஓசூர் சாலை உட்பட அனைத்து இடங்களிலும் கன்னட அமைப்பினர் சாலைகளில் டயர்களை கொளுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 7 நாட்களுக்கு பிறகு இயக்கப்பட்ட‌ தமிழகம் - கர்நாடகா இடையேயான போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது.

பெங்களூரு, மண்டியா, ராம் நகர், மைசூரு, சாம்ராஜ்நகர் ஆகிய இடங்களில் அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், திரையரங்குகளும், தனியார் அலுவலகங்களும் கட்டாயப்படுத்தி மூடப்பட்டன. அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக் கப்பட்டது. மெட்ரோ ரயில், ஆட்டோ, டாக்ஸி மற்றும் அரசு பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் லட்சக்கணக்கான மக்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப் பட்டனர். இதனால் மக்கள் ஆங்காங்கே தலைதெறிக்க ஓடியதால் பெங்களூரு மாநகரமே போர்க்களமாக மாறியது.

துப்பாக்கிச் சூடு

பெங்களூருவில் கங்கத ஹேட்டே என்ற இடத்தில் கலவரக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

பெங்களூரு, மண்டியா, மைசூரு ஆகிய இடங்களில் ஆங்காங்கே தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு தாக்கப் பட்டன. கர்நாடகாவில் தமிழர் களுக்கு சொந்தமான தனியார் அலுவலகங்கள், கடைகள், நிறு வனங்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டன. குறிப்பாக, பெங்களூருவில் பல இடங்களில் இயங்கி வரும் அடையார் ஆனந்தப‌வன், பூர்வீகா மொபைல் உள்ளிட்ட கடைகள், திரையரங்குகள், தமிழ் அமைப்பினர் அலுவலகங்கள் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது.

பெங்களூருவில் ஆங்காங்கே தமிழக பதிவெண் கொண்ட பஸ், லாரி, வேன், கார், இரு சக்கர வாகனம் உட்பட 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொளுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரு மாநகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டது.

ராணுவ உதவி

கர்நாடகாவில் பாதுகாப்புப் பணிக்கு கூடுதலாக ராணுவப் படையை அனுப்ப வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். இரு மாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in