

டெல்லி அருகே போதைப் பொருட்கள் விற்பதாக புகார் எழுந்தது. போதைப் பொருள் விற்பதாக ஆப்பிரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ஆப்பிரிக்க நாட்டு தூதர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், வெளிநாட்டினர் மீதான தாக்குதல் என்றும் இந்தியர்கள் இனவெறியுடன் நடந்து கொண்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய், இந்தியாவில் இனவெறி இல்லை என்று பேசினார். அப்போது அவர் கூறும்போது, ‘‘இந்தியர்களுக்கு இனவெறி இருந்தால், கறுப்பு நிறம் கொண்ட தென்னிந்திய மக்களுடன் நாங்கள் எப்படி வாழ்வோம். எங்கள் நாட்டிலும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கறுப்பு நிறத்தவர்கள் இருக்கிறார்கள். எங்களைச் சுற்றிலும் கறுப்பு நிறத்தவர்கள் இருக்கிறார்கள்’’ என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
தருண் விஜயின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் அவருக்கு எதிராக கருத்துகள் வெளியிடப் பட்டன. இதையடுத்து ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார் தருண் விஜய். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கறுப்பு நிறக் கடவுள் கிருஷ்ணனை வழிபடுகின்றனர். என்னுடைய வார்த்தைகள் நான் சொல்ல வந்த கருத்தை வெளிப்படுத்த போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். எனினும், என் னுடைய கருத்தால் புண்பட்டிருந் தால் அதற்காக நான் வருந்து கிறேன். மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் சொல்ல வந்தது என்ன வென்றால், நாம் நிறவெறியை எதிர்த்து போராட்டம் நடத்தி இருக்கிறோம். இந்தியாவில் பல்வேறு நிறமுள்ள, கலாச்சாரம் கொண்டவர்கள் வாழ்கின்றனர். எனினும், நம்மிடம் நிறவெறி இல்லை. அதேசமயம் தென்னிந் தியர்கள் கறுப்பர்கள் என்று நான் எப்போதும் சொன்னதில்லை. வாய் தவறி கூட நான் அப்படி சொல்ல மாட்டேன்.
என்னுடைய சொந்த நாட்டை, மக்களை, கலாச்சாரத்தை நான் எப்படி கேலி செய்வேன். அதற்குப் பதில் நான் இறந்துவிடுவேன். இவ்வாறு தருண் விஜய் கூறியுள்ளார்.