Last Updated : 29 Jul, 2016 11:28 AM

 

Published : 29 Jul 2016 11:28 AM
Last Updated : 29 Jul 2016 11:28 AM

‘சார்க்’ மாநாட்டில் பங்கேற்க ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் பயணம்: தீவிரவாத பிரச்சினையை விவாதிக்க திட்டம்

‘சார்க்’ நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அடுத்த வாரம் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘சார்க்’ 13-வது மாநாடு, 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் தாகாவில் நடைபெற்றபோது, ‘சார்க்’ நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் ஆண்டுதோறும் கூடி விவாதிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, இந்தாண்டு ‘சார்க்’ உள்துறை அமைச்சர்கள் மாநாடு, வரும் ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இதில், இந்தியா சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை அதிகரித்த, பதான்கோட் தாக்குதல் சம்பவத்துக்குப் பின், முதல் முறையாக இந்தியாவின் மூத்த தலைவர் ஒருவர் பாகிஸ்தானுக்குச் செல்கிறார்.

மேலும், காஷ்மீரில் அண்மை யில் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானியை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் ‘வீர் தியாகி’ என வர்ணித்ததோடு, ‘காஷ்மீர் பாகிஸ்தானின் அங்கமாகும்’ என்றும் கூறி சர்ச்சையைக் கிளப் பினார். நவாஸ் ஷெரிஃப்புக்கு, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் பதிலடி கொடுத்தார்.

இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். மாநாட்டில் பேச உள்ள ராஜ்நாத் சிங், இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பகிரங்கமாகவே கூறப்போவதாக, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு அப்பால், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் ஆகியோரை தனியாக சந்தித்துப் பேசவும் ராஜ்நாத் சிங் திட்டமிட்டுள்ளார்.

அப்போது, காஷ்மீர் மற்றும் இதர பகுதிகளில் நிகழும் தீவிரவாத நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் பங்களிப்பு குறித்த ஆதாரங்களை அவர் வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பதான்கோட் மற்றும் மும்பை தாக்குதல் வழக்குகள் மந்த கதியில் நடப்பது குறித்தும் ராஜ்நாத் சிங் பிரச்சினை எழுப்புவார்.

ராஜ்நாத் உடன் மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் மெஹரிஷி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x