

சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து வரும் 13-ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப்ரவரி, மார்ச்சில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் ஆளும் சமாஜ்வாதி கட்சியில் மோதல் வெடித்துள்ளது.
கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கும் அவரது மகனும் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் தனித்தனி அணிகளாக செயல்படுகின்றனர். இருதரப்பின ரும் கட்சியின் சைக்கிள் சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கோரி தேர்தல் ஆணையத் திடம் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் தொடர்பாக இருதரப்பினரிடமும் வரும் 13-ம் தேதி தேர்தல் ஆணையம் விசா ரணை நடத்த உள்ளது. அன்றைய தினம் டெல்லியில் உள்ள தலை மைத் தேர்தல் ஆணையம் முன்பு ஆஜராகுமாறு முலாயம், அகிலேஷ் தரப்பினருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கட்சி எம்எல்ஏ, எம்எல்சி, எம்பிக் களில் 50 சதவீதத்துக்கு மேல் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் களோ அவர்கள் கட்சி சின்னத்தை கைப்பற்றக்கூடும். அதன்படி வரும் 17-ம் தேதிக்குள் சைக்கிள் சின்னம் யாருக்குச் சொந்தம் என்பது முடிவு செய்யப்படும் அல்லது முடக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அகிலேஷ்- முலாயம் சந்திப்பு
இதனிடையே உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது தந்தை முலாயம் சிங்கை லக்னோவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அப் போது சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளி யாகி உள்ளன.
ஆனால் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட வில்லை. முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது கொள்கையில் உறுதியாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.