முத்தலாக், பலதார மணம் தொடர்பான வழக்கு: மே 11-ல் அரசியல் சாசன அமர்வில் விசாரணை - உச்ச நீதிமன்றம் உத்தரவு

முத்தலாக், பலதார மணம் தொடர்பான வழக்கு: மே 11-ல் அரசியல் சாசன அமர்வில் விசாரணை - உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

முஸ்லிம்களிடையே உள்ள முத்தலாக் விவாகரத்து வழக்கம், பலதார மணம் போன்றவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மே 11-ம் தேதி முதல் விசாரணை நடக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிம்கள் திருமணத்துக்குப் பிறகு ‘தலாக்’ என்ற சொல்லை 3 முறை சொல்லி விவாகரத்து பெறும் வழக்கம் உள்ளது. அத்துடன் பலதார மணம் புரியும் நடைமுறையும் உள்ளது. இந்த வழக்கங்களால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதாக குரல் எழுந்தது. இந்த வழக்கங்கள் இந்திய சட்டப்படி செல்லுமா என்று கேள்வி எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் பெண் உட்பட சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், ‘‘இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும். மே 11-ம் தேதி முதல் விசாரணை தொடங்கும்’’ என்று உத்தரவிட்டனர்.

முன்னதாக இந்த மனுக்கள் மீது பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி முத்தலாக், பலதார மணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள பாலின சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும்’’ என்று மத்திய அரசு வலியுறுத்தியது.

இதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மத விஷயங்களில் மத்திய அரசு தலையிடக் கூடாது. முத்தலாக் விஷயத்தில் திருத்தம் செய்வது புனித குர்ஆனில் திருத்தம் செய்வது போலாகும் என்று கூறியது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in