

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் விவகாரத்தில் குற்றம்சாட்டப் பட்டுள்ள மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவான் மீது வழக்கு பதிவு செய்ய மாநில ஆளுநர் சங்கர நாராயணன் அனுமதி தராததை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பத்திரிகையாளர் கேதன் திரோத்கர் வெள்ளிக் கிழமை தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நீதித்துறையின் கண்காணிப்பில் நடைபெறும் வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட அரசு ஊழியர்கள் மீது சிபிஐ நடவடிக்கை எடுப்பதற்கு தில்லி சிறப்பு போலீஸ் சட்டத்தின் 6-ஏ பிரிவின்படி யாருடைய அனுமதியையும் பெறத் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தர விட்டுள்ளது.
இதுதவிர, சவான் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஆளுநரிடம் சிபிஐ சமர்ப்பித்துள்ள ஆவண தொகுப்பு நம்பகத்தன்மை வாய்ந்தது. ஆதர்ஷ் குடியிருப்பில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் பரப்பளவில் (எப்எஸ்ஐ) வீடுகட்ட அனுமதி அளித்ததன் மூலம் சவான் தவறான முடிவு எடுத்துள்ளதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்குப் பிரதிபலனாக, சவானின் மாமியார் மற்றும் மாமனாரின் சகோதரர் ஆகியோருக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உண்மை இவ்வாறு இருக்க, சவான் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி அளிக்காதது ஏன் என அந்த மனுவில் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் தொடர்பான இரு நபர் விசாரணைக் குழுவின் அறிக்கை மாநில அரசிடம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சவான் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் மறுத்து விட்டதையடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது.
கார்கில் போரில் கணவனை இழந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்காக உருவாக்கப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பு வளாகத்தில், 40 சதவீத குடியிருப்புகளை பொதுமக்களுக்கு வழங்க சவான் அனுமதி அளித்தது சட்டவிரோதம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.