

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொது கழிப்பிடம் கட்டுவதற்கு நிலம் கொடுத்த ஒரு விதவைப் பெண்ணை, மாவட்ட அளவிலான தூதராக நியமித்துள்ளது சுலப் இன்டர் நேஷனல் நிறுவனம். அத்துடன் சுகாதார ஊக்குவிப்பாளராகவும் அறிவித்துள்ளது.
சுற்றுப்புற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான சுலப், மனோராணி யாதவ் என்ற அந்தப் பெண்ணுக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் அத்துடன் மாதாந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்றும் சனிக்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து சுலப் அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வரி பதக் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பபானிபூர் கிராம பெண்களை ஒன்று திரட்டிய யாதவ், மாவட்ட ஆட்சியர் கிஞ்சல் சிங்கை அணுகி கழிப்பிடம் கட்டித்தருமாறு கோரி உள்ளார்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் நிதியுதவி அளிக்க முன்வந்தபோதும், வனத்துறை உட்பட நிலம் ஒதுக்க யாரும் முன்வரவில்லை. இந்நிலை யில், தினக்கூலி வேலை செய்து வரும் யாதவ், தனக்கு சொந்தமாக இருந்த சிறிய அளவு நிலத்தை வழங்கி முன் மாதிரியை ஏற்படுத்தி உள்ளார்" என்றார்.