

சமாஜ்வாதி கட்சியினரை கண்டித்து உத்தரப் பிரதேசத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்களின் வேலைநிறுத்தம் ஐந்தாம் நாளாக தொடர்கிறது. இது குறித்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை கான்பூரின் ஹேலட் மருத்துவமனையில் காரை பின்னால் எடுத்த ஒரு மருத்துவ மாணவர், அங்கிருந்த பெண்ணை சரியாகப் பார்க்காமல் மோதி உள்ளார். இதில், காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அணுகியபோது, இடித்த மருத்துவரை திட்டியுள்ளார். இதனால் அவருடன் மருத்துவர்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அங்கு மருந்து வாங்க வந்த சமாஜ்வாதி எம்.எல்.ஏ. இர்ஃபான் சோலாங்கி, தன்னுடன் இருந்த காவலரிடம், பிரச்சினையை விசாரிக்கக் கூறியுள்ளார். அங்கு சென்றவருடனும் மருத்துவர்களுக்கு தகராறு ஏற்பட அவர்கள், காவலரின் துப்பாக்கியை பிடுங்கி அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அவரை காப்பாற்ற சென்ற எம்.எல்.ஏ.வுடனும் தகராறு ஏற்பட்டு அடிதடி நடந்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அங்கு வர, இருதரப்பிலும் பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். இதில் பல மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மறுநாள் தொடங்கிய வேலைநிறுத்தத்தால், மாநிலத்தின் மருத்துவக் கல்லூரிகள் அனைத் தும் மூடப்பட்டு, நோயாளிகள் சிகிச்சைகிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 25 பேர் சிகிச்சை கிடைக்காமல் இறந்து போனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதால் தான் அங்கு சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் பதிவுகளை பார்த்த பின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இதில், தவறு செய்தவர்கள் சமாஜ்வாதி கட்சியினர், மாணவர்கள் அல்லது போலீஸார் என யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
கைது செய்யப்பட்ட மாணவர் களை ஜாமீனில் விட அனுமதித்தும் அவர்கள் சிறையில் இருந்து வெளியே வர மறுக்கின்றனர்’ எனக் கூறினார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை புதன்கிழமை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.