Published : 25 Nov 2014 10:10 AM
Last Updated : 25 Nov 2014 10:10 AM

வரதட்சணை புகார் பொய் என நிரூபணமானால் மனைவியை கணவர் விவாகரத்து செய்யலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஒரு பெண் தனது கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கூறப்பட்ட வரதட்சணை புகார் பொய்யானது என நிரூபணமானால், அந்தப் பெண்ணை விவாகரத்து செய்ய அவரது கணவருக்கு உரிமை உள்ளது என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கே.சுனிதா கடந்த 1995-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி தனது கணவர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதையடுத்து, அதே ஆண்டு ஜூலை 14-ம் தேதி அவரது கணவர் கே.சீனிவாஸ் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தை அணுகினார். திருமண உறவை முறிக்கும் வகையில் மனைவி நடந்து கொண்டதாகவும் தனக்கு கொடுமை இழைத்து விட்டதாகவும் அதில் கூறியிருந்தார்.

இதற்கு பழிவாங்கும் நோக்கத் துடன் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் சுனிதா புகார் கொடுத் தார். இதன் அடிப்படையில் சீனிவாஸ் மற்றும் அவரது குடும்பத் தினரை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஹைதராபாத் நீதி மன்றம், கடந்த 2000-வது ஆண்டு ஜூன் 30-ம் தேதி சீனிவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை குற்றச் சாட்டுகளிலிருந்து விடுவித்தது.

முன்னதாக, கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி சீனிவாஸுக்கு விவாகரத்து வழங்கி குடும்பநல நீதிமன்றம் உத்தர விட்டது. இதை எதிர்த்து சுனிதா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதையடுத்து விவாகரத்து வழங்கிய குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதுகுறித்து சீனிவாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம்ஜித் சென் மற்றும் பி.சி.பந்த் ஆகியோரடங்கிய அமர்வு, கே.சீனிவாஸ் மற்றும் கே.சுனிதா ஆகியோரின் திருமணத்தை ரத்து செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. பொய்யாக வரதட்சணை புகார் கூறும் மனைவி யை விவாகரத்து செய்ய கண வருக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“பிரதிவாதி (மனைவி) திட்ட மிட்டு, உள்நோக்கத்துடன் பொய் யான குற்ற வழக்கு பதிவு செய்துள் ளார் என்பது சந்தேகத் துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. இதை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருக்க வேண்டும். எனவே, குடும்பநல நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உறுதி செய்து, இவர்களது திருமணத்தை ரத்து செய்கிறோம்” என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x