

பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்துக்கு காந்தி பிறந்த நாளான வரும் 2-ம் தேதி இந்தியா ஒப்புதல் வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் பாஜகவின் தேசியக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு இறுதியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடந்த உச்சி மாநாட்டில், சராசரி வெப்பநிலையைக் குறைக்க வகை செய்யும் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்துக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் ஒப்புதல் தர வேண்டி உள்ளது. இதற்கு மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி இந்தியா ஒப்புதல் வழங்கும் என்று தீன் தயாள் உபாத்யாய் அவர்களின் நூற்றாண்டு பிறந்த தினமான இன்று அறிவிக்கிறேண்.
கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக மகாத்மா காந்தி வாழ்க்கை அமைந்திருந்தது. எனவேதான் அவரது பிறந்த நாளில் பாரிஸ் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலால் கடற்கரையோர நாடுகள், நகரங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசும்போது, “இந்திய அரசமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களிடம் மத்திய அரசு ஒருபோதும் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது” என காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பதில் அளிக்கும் வகையில் கூறினார்.