Published : 08 Mar 2017 09:18 AM
Last Updated : 08 Mar 2017 09:18 AM

நம்பிக்கை, விரக்தி நிரம்பிய கிழக்கு உத்தரப் பிரதேசம்

ஆப்பிரிக்கக் கண்டத்தின் சஹாரா பாலைவனத்துக்குக் கீழேயுள்ள நாடுகளுக்கு இணையான பின் தங்கிய நிலைமை என்று அடைமொழி இடுவதானால், அதற்கேற்ற பகுதி என்று அழைக்கப்படுவதற்கு ஏற்றதாக உத்தரப் பிரதேசத்தில் பல இருக்கின்றன. எதுவுமே விளையாத மேட்டாங்காடு, வளர்ச்சியே காணாத பள்ளத்தாக்கு என்று யமுனை ஆற்றையொட்டிய பகுதிகள், சம்பல் பள்ளத்தாக்கு, புந்தேல்கண்ட், எடாவா என்று அவற்றைக் குறிப்பிடலாம். இவை அனைத்துமே சட்டம் ஒழுங்கை அமல்படுத்த முடியாத தனிப் பிரதேசங்கள்.

மாநிலத்தின் தொலைதூரத்தில் இருக்கும் கிழக்குப் பகுதியில் ஒழுங்கான வடிவான நீராதார வசதிகள் உள்ளன. கரைப்பகுதிகள் செழிப்பானவை. ஆனால் மக்களுடைய வாழ்க்கைத் தரமும், சட்டத்தின் ஆட்சியும் தாழ்வுற்றுக் கிடக்கின்றன. திறந்த சாக்கடைகள், சாலையில் வழியும் சாக்கடைகள், ஆங்காங்கே தலையில் உரசும் மின்சார வயர்கள், காற்றில் கலந்த துர்வாடை, பல்லாங்குழிச் சாலைகள், ஆக்கிரமிப்புகள், சோகையான குழந்தைகள், கன்னம் ஒட்டிப்போன பெரியவர்கள், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கில் பலிவாங்கும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் இவையே இப்பகுதியின் அடையாளங்கள். உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியின் தலைநகரம் கோரக்பூர் (கோ-ரட்சணபுரி). பவுத்த யாத்திரைத்தலமான குஷி நகரம் இங்கே இருக்கிறது. தெற்கில் உள்ள தேவ்ரியா, ஆசம்கட், பாலியா, ஜான்பூர் மாவட்டங்களும் பின்தங்கிய நிலைமையிலேயே உள்ளன. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை நாம் புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே நீண்டகாலமாக நடத்தி வந்திருக்கிறோம். உத்தரப் பிரதேசத்தின் கிழக்கின் நிலைமையும் அதுதான்.

கோரக்பூர் சாலையில் நடக்கும்போது உங்களுடைய பாதங்களில் சேறு அப்பிக்கொள்ளும்; மேலே பார்த்து நடந்தால் தனியார் துறையில் கடந்த 15 ஆண்டுகளாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் கல்விப் புரட்சி டிஜிட்டல் விளம்பர பேனர்களாகக் கண்ணில் படும். பூர்வாஞ்சல் என்று அழைக்கப்படும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் நம்பமுடியாத அளவுக்கு இது அதிகரித்துவிட்டது. மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் இரவு நடைப்பயிற்சி சென்றபோது டிஜிட்டல் பேனர்கள் 200-க்கும் மேல் இருப்பதை எண்ணிக்கொண்டே சென்றேன். அவற்றில் 170 கல்வி தொடர்பானவை! ஆங்கிலத்தில் தடையில்லாமல் பேச நீங்கள் பழக வேண்டாமா என்று ஒரு விளம்பரம் இந்தியில் கேட்கிறது. டாக்டர் ராகுல் ராய் என்பவர் படத்துடன் உள்ள பேனர், கடந்த 18 ஆண்டுகளில் இவரிடம் பயிற்சிப் பெற்று நுழைவுத் தேர்வில் வென்று மருத்துவம் படித்து டாக்டர்கள் ஆனவர்கள் 1,012 பேர் என்கிறது. இப்படி வாழ்க்கையில் உயர பலர் முயற்சி செய்தாலும் பெரும்பாலானவர்கள் நகரின் புறநகர்ப் பகுதிகளிலும் சேரிகளிலும் வசிக்கின்றனர். 6 கோடி இந்தியர்கள் வாழும் இந்தக் கிழக்குப் பகுதியை எந்தத் திரைப்படத் தயாரிப்பாளரும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. இப்பகுதி இளைஞர்கள் இங்கிருந்து எங்காவது சென்றுவிட வேண்டும் என்றே துடிக்கின்றனர்.

நரேந்திர மோடி சிறந்த பேச்சாளர்; தன் எதிரில் இருப்பவர்கள் எதை, எப்போது, எப்படி, எந்தக் குரலில் கேட்க விரும்புவார்கள் என்று அவருக்குத் தெரியும். கோரக்பூருக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவ்ரியாவில் பேசியபோது அபூர்வமாக எதையோ கண்டுபிடித்த வியப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்; ஆம்; மிகச் சிறந்த அந்த மேடைப் பேச்சில் ஒரு அபஸ்வரம் விழுந்திருந்தது. அது புரிதலில் ஏற்பட்ட கோளாறு.

கடந்த காலங்களில் ராகுல் காந்தி அப்படி பல இடங்களில் பேசியிருக்கிறார். இந்தப் பகுதியின் சாபமே, வேலைக்காகப் பிற பகுதிகளுக்குக் குடி பெயர்ந்து போவதுதான் என்று மோடியும் பேசியிருக்கிறார். நீங்களிருக்கும் வட்டத்திலேயே வேலை கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பவில்லையா, வீட்டைவிட்டு வெகு தொலைவில் இருக்கிற மாநிலங்கள்தான் உங்களுடைய இலக்கா என்று மோடி கேட்டார். ‘இல்லை’ என்று பெரும்பாலானவர்கள் சொல்லவில்லை. சொன்னவர்களும் உரக்கச் சொல்லவில்லை. இப்பகுதி இளைஞர்கள் காத்துக் கிடப்பதே இங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதற்காகத்தானே.

இங்கே வாழ்க்கைத் தரம் மோசமானது. திறந்த வெளி சாக்கடைகள் மழைக் காலங்களில் பெரிய வாய்க்கால்களாகவே மாறுகின்றன. எப்போது காற்றை விழுங்கினாலும் அதில் தூசு கலந்தே வாய்க்குள் போகிறது. உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள் வளர்ச்சியில் ஆப்பிரிக்க நாடுகளைவிட பின் தங்கியிருக்கின்றன என்று மாநில அரசின் இணைய தளமே கூறுவதிலிருந்து மேற்கோள் காட்டினார் மோடி.

ரயில் பாதையிலும் தேசிய நெடுஞ் சாலையிலும் முக்கியமான இடத்தில் இல்லை கோரக்பூர். சமீபகாலம் வரை மீட்டர் கேஜ் ரயில்பாதைதான் இங்கிருந்தது. இம் மக்கள் திறமைசாலிகள், புரட்சிக்காரர்கள். கோரக்பூர் தேவ்ரியா நகரங்களுக்கு இடையில் இருப்பதுதான் சௌரிசௌரா. காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்துக்கு அழைப்புவிடுத்த சமயம், 1922 பிப்ரவரியில் இந்த காவல் நிலையத்தைச் சேர்ந்த 23 போலீஸ்காரர்களை போராட்டக்காரர்கள் உயிரோடு எரித்தனர். இதைக் கண்டித்து ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தை நிறுத்திய காந்தி, தவறுக்குத் தானே காரணம் என்று கூறி அதற்குப் பரிகாரமாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். பிரிட்டிஷார் உடனே ராணுவ ஆட்சியைக் கொண்டுவந்து தேச விடுதலைக்காகப் போராடியவர்களைக் கைது செய்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டனர். அவர்களுக்குப் பரிந்து பேச ஜவாஹர்லால் நேரு இங்கு வந்து கைதானார். இவ்வளவு பின்தங்கிய, தொலைதூரப் பகுதிக்கு நேரு எப்படி வந்தார் என்று 94 ஆண்டுகளுக்குப் பிறகும் வியப்பு ஏற்படுகிறது. தேச விடுதலைக்காகப் பாடுபட்ட புரட்சிக்காரர்கள் உலவிய மண்ணில் இப்போது மாஃபியாக்கள் நடமாடுகின்றனர். இப்போது கோரக்பூரை ஆள்வது நிலச்சுவான்தாரர்களோ மாஃபியாக்களோ அல்ல, கோரக்நாத் மடாலயத்தின் பரம்பரைத் தலைவரான யோகி ஆதித்யநாத். இவர் இங்கிருந்து தொடர்ந்து 5 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இங்குள்ள பேரவைத் தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் பாஜகவை இவர் வெற்றிபெற வைப்பார்.

இப்பகுதியில் இவருடைய நிர்வாகத்தில் இருக்கும் கோயிலும் மடாலயமும் அடையாளச் சின்னங்கள். மிகவும் தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றன. ஒரு தொகுதியிலும் முஸ்லிமை ஏன் வேட்பாளராக்கவில்லை என்று கேட்டபோது, வெற்றி பெறக்கூடியவர்களை மட்டுமே தேர்வு செய்கிறோம் என்றார்.

மிகப் பெரிய பரப்பளவையும் மக்கள் தொகையையும் கொண்ட உத்தரப் பிரதேசத்தை நிர்வாக வசதிக்காக மேலும் பிரிக்க வேண்டும் என்ற யோசனை பற்றி கேட்டபோது, அவருடைய கண்கள் பிரகாசமடைகின்றன. அவற்றில் ஒன்றாக கிழக்குப் பகுதியான பூர்வாஞ்சல் இருக்கக்கூடும்.இப்போது அதற்கு நேரமில்லை என்று கூறும் ஆதித்யநாத், எதிர்காலத்தில் பிரிக்கலாம் என்கிறார். அப்படி நிகழ்ந்தால் அவர்தான் முதலமைச்சராவார்.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x