

நீட் தேர்வு எழுதவந்த மாணவியை கண்காணிப்பு என்ற பெயரில் அவரது உள்ளாடையை அகற்றச் செய்தது வெட்கக்கேடான மனிதாபிமானமற்ற செயல் என கேரள பெண் எம்.பி. பி.கே.ஸ்ரீமதி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வை நடத்திய மத்திய பள்ளிக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), முறைகேடுகளை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரியரம் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியிடம் மேல் உள்ளாடையை கழட்டுமாறு கண்காணிப்பாளர் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவி உள்ளாடையைக் கழட்டி தேர்வு மையத்துக்கு வெளியே இருந்த தனது தாயிடம் கொடுத்த பிறகே, அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தகவலை அந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு எழுதவந்த மாணவியை கண்காணிப்பு என்ற பெயரில் அவரது உள்ளாடையை அகற்றச் செய்தது வெட்கக்கேடான மனிதாபிமானமற்ற செயல் என கேரள எம்.பி. பி.கே.ஸ்ரீமதி தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தை ஆடைக் கட்டுப்பாடு வரைமுறைகளை மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்போவதாகவும். இப்பிரச்சினை தொடர்பாக கேரள முதல்வரும், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.