

ஆந்திரத்தில் புதிய மாநிலங்களை உருவாக்குவது தொடர்பாக அந்த மாநில கட்சித் தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் குழு நவம்பர் 12, 13-ம் தேதிகளில் ஆலோசனை நடத்த உள்ளது.
தெலங்கானா, சீமாந்திரா மாநிலங்களை உருவாக்குவது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் குழு, 3-வது முறையாக டெல்லியில் வியாழக்கிழமை கூடி ஆலோசனை நடத்தியது.
இதில் இரு மாநில எல்லை நிர்ணயம், நதிநீர் பகிர்வு, சொத்துகள் பிரிவினை, மின் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்துக்குப் பின்னர் குழுவின் தலைவரான மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறியது:
முதல்கட்டமாக மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலர்களை நவம்பர் 11-ல் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளோம்.
அதைத் தொடர்ந்து நவம்பர் 12, 13-ம் தேதிகளில் ஆந்திர மாநில அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேச உள்ளோம்.
காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அகில இந்திய மஜ்லிஸ் –இ- இத்தேஹதுல் முஸ்லிமின் ஆகிய கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஆந்திரத்தை எவ்வாறு பிரிப்பது, சொத்துகள், நதிநீர் பகிர்வு, மின் விநியோகம், எல்லை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கட்சித் தலைவர்களின் கருத்துகள் கேட்டறியப்படும்.
அதைத் தொடர்ந்து நவம்பர் 18-ல் அந்த மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளோம் என்றார்.
நிதியமைச்சர் ப. சிதம்பரம், சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் மத்திய அமைச்சர்கள் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். பிரதமர் அலுவலக இணையமைச்சர் வி.நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக குழுவில் இடம்பெற்றுள்ளார்.
இந்தக் குழு பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்று வருகிறது.
இதுவரை அமைப்புகள், தனி நபர்களிடம் இருந்து 18,000-க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை குழுவினர் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.