

வடக்கு காஷ்மீரில் மச்சில் செக்டார், குப்வாரா பகுதியில் இன்று (சனிக்கிழமை) ஏற்பட்ட பனிச்சரிவில் 5 ராணுவ வீரர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் 'தி இந்து' ஆங்கிலத்திடம் கூறும்போது, "காஷ்மீரின் வடக்கில் குப்வாரா பகுதியில் இன்று (சனிக்கிழமை) ஏற்பட்ட பனிச்சரிவில் ஐந்து ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். வீரர்களை மீட்க மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று கூறினார்.
தொடர்ந்து அப்பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மீட்புப் பணிகள் நடைபெறுவது தாமதமாகிறது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மச்சில் செக்டார் பகுதி இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள பகுதியாகும். இப்பகுதி தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகமுள்ள பகுதியாக கருதப்படுகிறது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குரேஸ் பகுதியில் 2 இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 15 பேர் ராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.