சர்ச்சைக்குரிய பேச்சு: தேர்தல் ஆணையத்திடம் ராகுல் விளக்கம்

சர்ச்சைக்குரிய பேச்சு: தேர்தல் ஆணையத்திடம் ராகுல் விளக்கம்
Updated on
1 min read

தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்திடம் இன்று விளக்கமளித்துள்ளார். தேர்தல் விதிமுறைகளை தான் எந்த வகையிலும் மீறவில்லை என ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளதாக தகவல். ராகுல் காந்தி, தனது பதிலை சீலிட்ட கவரில் போட்டு தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுத்துச் சென்றார்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசியதாக, பாஜக அளித்த புகாரின் அடிப்படையில், ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடந்த மாதம் இறுதியில் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நவம்பர் 4-ம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

நவம்பர் 4-ம் தேதி, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்க வேண்டியிருந்த நிலையில், பண்டிகை காலத்தைக் கருத்தில்கொண்டு மேலும் ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்துக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருந்தார்.

அதில், அக்டோபர் 31-ம் தேதிதான் தன்னிடம் நோட்டீஸ் கிடைத்தது என்றும், தனது வழக்கறிஞரிடம் ஆலோசிக்க வேண்டியுள்ளது என்றும் ராகுல் தெரிவித்திருந்தார். மேலும், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பணி நிமித்தமாக, குறித்த நேரத்தில் தன்னால் விளக்கம் அளிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், அவர் பதிலளிப்பதற்கு 4 நாள்கள் அவகாசம் வழங்கியது.

ராகுல் பேசியது என்ன?

ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தின்போது, "உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உள்ள முஸ்லிம் இளைஞர்களுடன் ஐ.எஸ்.ஐ. (பாகிஸ்தான் உளவு அமைப்பு) தொடர்பு வைத்துள்ளது என்று இந்திய உளவுப் பிரிவினர் எனக்கு தகவல் தெரிவித்துள்ளனர்' என்று பேசினார். சர்ச்சைக்குரிய இந்தப் பேச்சு தொடர்பாகவே, தேர்தல் ஆணையத்திம் பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in