

ஹரியாணாவில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலின் ஆசிரமத்தில் இருந்து ஆயுதங்கள், பணம், குண்டு துளைக்காத ஆடைகள், கமாண்டோ சீருடைகள் போன்றவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஹிசார் நகரில் உள்ள சாட்லோக் ஆசிரமத்தில் ராம்பால் (63) கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கைது நடவடிக்கைக்குப் பிறகு நேற்று முதல் முறையாக போலீஸார் அவரை அவரது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஆசிரம வளாகம் முழுவதும் அவரை அழைத்துச் சென்ற போலீஸார், அங்குள்ள மிகப் பெரிய லாக்கர்கள், அலமாரிகள் ஆகியற்றை மாஜிஸ்திரேட் முன் னிலையில் திறந்து பார்த்தனர்.
அப்போது லாக்கர்களில் இருந்த துப்பாக்கிகள், ரவைகள், குண்டு துளைக்காத ஆடைகள், கமாண்டோ சீருடைகள் மற்றும் பணத்தை போலீஸார் கைப்பற்றினர்.
ஆசிரம வளாகத்தில் இருந்து குண்டு துளைக்காத வாகனம், 1 டேங்கர் லாரி, 2 டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள், நூற்றுக் கணக்கில் தடிகள், பல்வேறு வகை துப்பாக்கிகள் போன்றவை ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட தாக போலீஸார் தெரிவித்தனர்.
மூத்த போலீஸ் அதிகாரி ஏ.கே.ராவ் கூறும்போது, “சிறப்பு புலனாய்வுக் குழுவின் சோதனைப் பணிக்கு உதவுவதற்காகவே ராம் பாலை ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றோம். அங்கு கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்திவருகிறோம்” என்றார்.
கொலை வழக்கில் ஆஜரா காததை தொடர்ந்து, ராம்பாலை கைது செய்ய சண்டீகர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை அவரை கைது செய்ய முயன்ற போலீஸாருக்கும் ராம்பாலின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு குழந்தையும் 5 பெண்களும் இறந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து கைது செய்யப் பட்ட ராம்பால் 5 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். ராம்பால் மீது பல்வேறு புதிய வழக்குகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன.