

மதுரா கலவரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரிய பொதுநல மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள ஜவஹர் பாக் பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற காவல்துறையினருக்கும், ஆக்கிரமிப்பாளர் களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாகி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட, 29 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 2-ம் தேதி நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, அஷ்வினி உபாத்யாய என்ற வக்கீல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என, மனுதாரர் சார்பில் ஆஜரான காமினி ஜெய்ஸ்வால் கோரினார்.
‘சம்பவம் நிகழ்ந்த முதல் நாளில் இருந்தே சாட்சிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. 200-க்கும் அதிகமான வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. வன்முறையின் தீவிரத் தன்மையை கருத்தில்கொண்டு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது அவசியமாகும்’ என, ஜெய்ஸ்வால் சுட்டிக் காட்டினார்.
இதை ஏற்று, இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. நீதிபதிகள் பி.சி.கோஸ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன்பு, இம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது.