

ராஜஸ்தானின் மொத்தவிலை சந்தைகளில் விளைபொருளை விற்பனை செய்யவரும் விவசாயிகளுக்கு, ஐந்து ரூபாயில் உணவளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை அமுல்படுத்த முதல்வர் வசுந்தரா ராஜே அனுமதி அளித்துள்ளார்.
இதற்காக, மாநில வேளாண்மை அதிகாரிகள் கூட்டம் வெள்ளிக் கிழமை நடந்தது. தமிழக த்தில் உள்ள அம்மா உணவகத்தை பின்பற்றி வசுந்தரா ராஜே இந்த திட்டத்தை கொண்டு வருவதாக கருதப்படுகிறது.
அது பற்றி நிருபர்களிடம் மாநில வேளாண்மை துறை அமைச்சர் பிரபுலால் செய்னி கூறியதாவது: ‘விவசாயிகளின் நலன் கருதி, மாநிலத்தின் 17 மொத்தவிலை சந் தைகளில் முதல்கட்டமாக மலிவு விலை உணவகத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். விளைபொருள்களை விற்க வரும் விவசாயிகளுக்காக ஐந்து ரூபாய் விலையில் உணவு வழங்கப்படும். மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் இந்த திட்டம் பின்னர் அமுல்படுத்தப்படும்.’ என்றார்.
தமிழகத்தில் உள்ள அம்மா உண வகங்கள் பற்றி அறிய ராஜஸ்தான் அரசு, இருவாரங்களுக்கு முன் அதிகாரிகள் குழுவை சென்னைக்கு அனுப்பி இருந்தது. இந்த குழு கொடுத்த அறிக்கையின் பேரில் மலிவு விலை உணவகத்தை விவசாயிகளுக்காக மாநில அரசு தொடங்க இருக்கிறது.
டெல்லியில் அம்மா உணவகம்
இதனிடையே, டெல்லியில் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவை முன்னிட்டு, ’அம்மா உணவகம்’ ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. சாணக்யபுரியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தில் ஜனவரி 15 வரை மூன்று நாட்களுக்கு இது செயல்படும்.