

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாலில் வெங்காய நெடி வீசியதால் நுகர்வோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இந்த சூழலில் அதிக அளவில் விளைந்த வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காத சோகத்தால், அதனை கறவை மாடுகளுக்கு விவசாயிகள் தீவனமாக வழங்கியதே பால் வாடையில் மாற்றம் ஏற்பட்டதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
அண்மையில் நாடு முழுவதும் வெங்காயம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த நிலையில், தற்போது ஒரு கிலோ ரூ.10க்கு கிடைத்து வருகிறது. இதனால் நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்தாலும் அதிக அளவு விளைச்சல் காரணமாக உற்பத்தி விலை கூட கிடைக்காமல் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தத்து வருகின்றனர்.
இதனை சமாளிக்கும் வகையிலும் கால்நடைகளுக்கான தீவன செலவை மிச்சப்படுத்தும் வகையிலும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெங்காயத்தை கறவை மாடுகளுக்கு தீவனமாக வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விநியோகிக் கப்படும் பாலில் வெங்காய நெடி வீசுவதாக நுகர்வோரிடம் இருந்து புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து மத்தியப் பிரதேச பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரத் மதுரவாலா கூறும்போது, ‘‘பருத்தி, புண்ணாக்கு போன்ற கால்நடை தீவனங்களின் விலை குவிண்டாலுக்கு ரூ.3,000 வரை உயர்ந்துள்ளது. தவிர விளைச்சலான வெங்காயத்துக்கும் உரிய விலை கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே விவசாயிகள் பலர் தங்கள் கால்நடைகளுக்கு விலை போகாத வெங்காயத்தை தீவனமாக அளித்துள்ளனர். இது குறித்து தெரியவந்ததும் வெங்காய தீவனத்தை நிறுத்தும்படி விவசாயி களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்’’ என்றார்.
இதற்கிடையில் கறவை மாடுகளுக்கு அதிக அளவில் வெங்காயத்தை தீவனமாக வழங்கினால், அதன் செரிமான உறுப்புகள் பாதிக்கப்படக்கூடும் என கால்நடை மருத்துவர் ஜோதி பிரகாஷ் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.