

இந்துமகா சமுத்திரத்தில் கடற் கொள்ளையர்கள், பயங்கரவாதிகளின் நடமாட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம் படுத்த இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்டுள்ளன. மத்திய அரசின் உயர் அதிகார வட்டாரங்கள் ‘தி இந்து’விடம் இந்த தகவலை தெரிவித்தன.
இது தொடர்பாக, இலங்கையின் பாதுகாப்பு செயலர் லெப்டினென்ட் கர்னல் கோத்தபய ராஜபக்சே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் ஆகியோர் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். இது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.
கொழும்பில் கடந்த மாதம் நடந்த காமன்வெல்த் உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காமல் இந்தியா சார்பில் வெளியுறவுச் செயலர் சல்மான் குர்ஷித் தலைமையிலான குழு பங்கேற்றது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின்போது இலங்கை பாதுகாப்புப்படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடு பட்டதாக வெளியான குற்றச்சாட்டு களை கண்டித்து இந்தியா தரப்பில் யாரும் பங்கேற்கக்கூடாது என தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவே மன்மோகன் சிங் செல்லவில்லை.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே ராஜீய உறவு நிலையில் பதற்ற நிலைமை உருவானது. அப்படியொரு நிலைமைக்கு மத்தியிலும் கோத்தபயவும் சிவ சங்கர மேனனும் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இது அல்லாமல் தனியாக இந்திய கடற் படை தளபதிகளுடனும் ஆலோ சனை நடத்தப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் கோத்தபய சந்தித்துப் பேசியுள்ளார். மரியாதை முறையில் குர்ஷித்தை சந்தித்ததாக கோத்தபய தெரிவித்ததை உறுதிப் படுத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் ராணுவ நிலை யிலான சந்திப்பு பற்றிய விவரம் பற்றி தெரிவிக்க முன்வரவில்லை.
இலங்கை பாதுகாப்பு செயல ருக்கும் கடற்படை தளபதிகளுக்கும் இடையே ஆலோசனை நடந்ததை இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளரும் உறுதி செய்தார். அவரும் இதர தகவல்களை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் அலுவலகமும் இந்த சந்திப்பு பற்றிய விவரத்தை கூற மறுத்துவிட்டது.
இரு நாடுகளுக்கும் பொதுவான பாதுகாப்பு நலன்களை காத்திடும் நோக்கில் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதே வியாழக்கிழமை நடந்த சந்திப்பின் முக்கியத்துவம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்டுள்ள அரசியல் பதற்ற மானது இருநாட்டு உறவுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பு மற்றும் பாதுகாப்பு சூழல்கள் ஆகியவை பற்றி கோத்தபய விவாதித்தார் என்றும் அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவும் இலங்கையும் மாலத்தீவுடன் இணைந்து இந்த ஆண்டு ஜூலையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மூன்று கடற்படையும் தமக்குள் எவ்வித இடையூறுமின்றி இணைந்து செயல்படுவதுதான் இதன்நோக்கம்.
இந்தியா பயிற்சி
தமிழக எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தாலும் அதை பொருட்படுத்தாமல் இலங்கை ராணுவத்தின் நூற்றுக்கணக்கான அதிகாரிகளுக்கு தமது கல்லூரிகளில் இந்தியா பயிற்சி தருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்படை வீரர்கள் தவிர நூற்றுக்கணக்கான ராணுவ அதிகாரிகளுக்கும் மத்தியப்பிரதேச மாநிலம் எம்ஹோ தரைப்படை பயிற்சிக் கல்லூரியிலும் இதர புகழ்மிக்க நிறுவனங்களிலும் பயிற்சி தரப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தபோதும் இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை இந்தியா தொடர்கிறது.
(கொழும்பிலிருந்து மீரா சீனிவாசன், புது டெல்லியிலிருந்து கௌரவ் பட்நாகர் ஆகியோர் அனுப்பிய செய்திகளுடன் தொகுக்கப்பட்டது)